இந்தியாவில் இணையதள வளர்ச்சிக்குப் பிறகு, சமூக வலைதளத்தின் வளர்ச்சி அபாரம் அடைந்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஃபேஸ்புக் ஆகியவற்றின் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ளது.


இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் இருந்து வீடியோக்கள் போடும் அளவிற்கு வளர்ந்த பிறகு, இன்ஸ்டாகிராமின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. குறிப்பாக, டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம்:


குறிப்பாக, பெரும்பாலானோர் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடி தங்களது திறமையை வெளிக்காட்டும் விதமாக ஆடு ரீல்ஸ்களாக வெளியிடுகின்றனர். இதன் மூலம் தங்களது திறமையை பலரும் வெளிக்காட்டுகின்றனர்.


அதேசமயம் சிலர் இந்த வீடியோக்களுக்காக செய்யும் செயல்கள் பொதுமக்களை பாதிக்கும் வகையிலும், அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அமைகிறது. அந்த வகையில், வட இந்தியாவில் இளம்பெண் ஒருவர் சாலையில் மையப்பகுதியில் நின்று கொண்டு பாடல் வரிகளுக்கு நடனம் ஆடுகிறார்.






கீழே விழுந்த வாகன ஓட்டி:


அந்த குறுகிய சாலையில் அவர் ஆடிக்கொண்டிருக்கும்போது பின்னால் இரண்டு இரு சக்கரவாகனம் வருகிறது. அந்த பெண் அவர்களுக்கு வழிவிடாமல், அவர்கள் ஆடுவதைப் பார்த்த பிறகும் தொடர்ந்து ஆடுகிறார். இதனால், அந்த பெண் மீது மோதி விடாமல் இருப்பதற்காக வாகன ஓட்டிகள் இருவரும் வாகனத்தை நிறுத்தி விடுகிறார்கள்.


அதில் ஒரு வாகன ஓட்டி தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். அவர் கீழே விழுவதைப் பார்த்த பிறகும் அந்த பெண் தொடர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருக்கிறது. நடனம் ஆடி முடித்த பிறகே வழிவிடுகிறது. கீழே விழுந்த வாகன ஓட்டி, அவரே எழுந்து தனது இரு சக்கர வாகனத்தை தூக்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


சிலர் இதுபோன்று வீடியோக்களை பதிவிடுவதற்காக பொதுமக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.