Lamborghinis Convoy: முசோறியில் 71 லாம்போர்கினி கார்கள் அணிவகுத்து சென்றதை, பொதுமக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
லாம்போர்கினி கார்களின் அணிவகுப்பு:
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அமைதியான மலைவாசஸ்தலமான முசோரி, சமீபத்தில் சூப்பர் கார் ஆர்வலர்களுக்கான ஆச்சரியமூட்டும் விளையாட்டு மைதானமாக மாறியது. காரணம், 71 லாம்போர்கினி கார்கள், ஒரே நேரத்தில் அந்த மலைப்பகுதியில் ஆடம்பரம் மற்றும் சக்தியின் மூச்சடைக்கக்கூடிய வெளிப்பாடாக அணிவகுத்தன. லாம்போர்கினி ஜிரோ நிகழ்வின் ஒரு பகுதியான இந்த அசாதாரண காட்சி, பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. இன்ஸ்டாகிராமில் சிரிஷ் சந்திரன் என்பவர் பகிர்ந்த ஒரு கிளிப், முசோரியின் துடிப்பான மற்றும் குறுகிய தெருக்களில் லம்போர்கினிகளின் ஊர்வலத்தை உலகிற்கு வெளிக்காட்டியது.
கண்டுகளித்த பொதுமக்கள்:
இதனிடையே, 71 விலையுயர்ந்த சூப்பர் கார்கள் அணிவகுத்த சிலிர்ப்பான காட்சிகளை, சாலையோரத்தில் நின்று இருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். குழந்தைகள் உட்பட உள்ளூர்வாசிகள் மற்றும் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் கூட இந்த காட்சியை கண்டு பரவசமடைந்தனர். பலர் இந்த காட்சியை தங்கள் மொபைல் போன்களில் படம்பிடித்தனர். இப்படி ஒரு காட்சியை நாங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை எனவும் பலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சமூக வலைதளத்தில் கண்டனம்:
இந்த சூப்பர் கார் கான்வாயை ஒரு தரப்பினர் ஆச்சரியமாக பார்த்த்தாலும், மற்றொரு தரப்பில் கண்டனங்களும் எழுந்துள்ளன. இதுதொடர்பான சமூக வலைதளப்பதிவில், ''லாம்போர்கினி ஜிரோ கான்வாய்க்காக அனைத்து போக்குவரத்தையும் நிறுத்த உள்ளூர் நிர்வாகம் உதவியுள்ளது. நீங்கள் எப்போதாவது முசோரி நகரத்தின் வழியாக ஓட்டிச் சென்றிருந்தால், போக்குவரத்து நெரிசல் எவ்வளவு அதிகமாக இருப்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர், ''அமைதியையும் இயற்கையையும் பசுமையையும் அனுபவிக்க மலைகளுக்குச் செல்கிறோம்... அதை நமக்காக மட்டுமே பராமரிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.