மதத்துடன் அரசியல் கலப்பதை அனுமதிக்க முடியாது என திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 


திருப்பதி கோயிலில் நெய்வேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி நிர்வாகமே இதற்கு காரணம் என சாடியிருந்தார்.


திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்படவில்லையா? இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லட்டில் கலப்படம் நடந்தது உண்மைதான் என குஜராத்தின் ஆய்வகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இந்த சூழலில், விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் செய்யப்பட்ட லட்டு கடவுளுக்கு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 


இந்த வழக்கை விசாரித்த பி.ஆர். கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சரமாரி கேள்விகளை கேட்டுள்ளது. கலப்பட நெய்தான் லட்டு செய்ய பயன்படுத்தியது என ஆய்வு முடிவுகள் கூறவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


நிராகரிக்கப்பட்ட நெய்தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வருகிறது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய விசாரணை தேவையா என்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து அறிவுறுத்தல்களை பெற வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்: "கடந்த ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதலமைச்சர் பொதுவெளியில் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ஆனால், கலப்பட நெய் பயன்படுத்தப்படவில்லை என திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதன்மை செயல் அதிகாரி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ஆய்வக அறிக்கை சிலவற்றை மறுக்கிறது. தெளிவாக கூறவில்லை. லட்டு செய்வதற்கு நிராகரிக்கப்பட்ட நெய்தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஆய்வு முடிவுகள் முதற்கட்டமாக கூறுகின்றன. நீங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தால், பத்திரிகையில் செய்தி வெளியிட வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?


நீங்கள் அரசியல் சாசன பதவியை வகிக்கும் போது, அரசியலில் இருந்து கடவுள்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.