பிரதமர் மோடி இன்று குஜராத்தின் காந்திநகரிலிருந்து அகமதாபாத் சென்றுள்ளார். அப்போது, அந்த பாதையில் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றதால், மோடி தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த வாகனத்திற்கு வழி விட்டுள்ளார்.
குஜராத் பாஜக ஊடக பிரிவு பகிர்ந்த வீடியோவில், அகமதாபாத் - காந்திநகர் சாலையில் பிரதமர் கான்வாயின் இரண்டு எஸ்யூவி வாகனகள் ஆம்புலன்ஸ் கடந்து செல்வதற்காக சாலையில் ஒதுங்கி சென்றதை காணலாம். ஆம்புலன்ஸ் கடந்து சென்றவுடன் அந்த சாலையின் மையபகுதியில் பிரதமரின் வாகனங்கள் மீண்டும் பயணத்தை தொடங்கின.
அகமதாபாத்தில் நடைபெற்ற பேரணிக்குப் பிறகு காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் மோடி சென்று கொண்டிருந்தார். அப்போது, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக குஜராத் பாஜக வெளியிட்ட அறிக்கையில், "அகமதாபாத்தில் இருந்து காந்திநகர் செல்லும் வழியில், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது குஜராத் பயணத்தின் இரண்டாவது நாளில், காந்திநகர்- மும்பை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காந்திநகர் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு இன்று ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
காந்திநகர் ரயில் நிலையத்துக்கு பிரதமர் வந்தபோது, அவருடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத், ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் உடன் இருந்தனர்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0-வின் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த பிரதமர், அதன் வசதிகளை பார்வையிட்டார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0-ன் இன்ஜின் கட்டுப்பாட்டு மையத்தையும் மோடி ஆய்வு செய்தார். பின்னர் காந்திநகர் மற்றும் மும்பை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது ரயில்வே ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், பெண் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்கள் உட்பட தன்னுடன் பயணித்த சக பயணிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். வந்தே பாரத் ரயில்களை வெற்றிபெறச் செய்ய உழைத்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுடனும் அவர் உரையாடினார்.