அம்பானியின் மனைவியும், தொழிலதிபருமான நீதா அம்பானி, இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல்துறை கலாச்சார மையத்தை மும்பையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) திறந்து வைக்க உள்ளார். அதனை முன்னிட்டு, 59 வயதான அவர் வியாழக்கிழமை ராம நவமியின் மங்களகரமான சந்தர்ப்பத்தில் ஒரு பூஜை விழாவை நடத்தியுள்ளார்.


நீதா அம்பானி பூஜை


பாரம்பரிய பூஜை செய்யும் நீதா அம்பானியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்க எம்பிராய்டரி வேலைகளுடன் கூடிய மெஜந்தா நிற பஞ்சாபி உடையில் இருந்த அவர், வைர ஸ்டுட்கள் மற்றும் மோதிரம் அணிந்திருந்தது பலர் கண்களை கவர்ந்தது. தொடக்க விழாவையொட்டி, இசை, நாடகம், நுண்கலைகள் மற்றும் கைவினைத் துறைகளில் இந்தியாவின் சிறந்தவற்றைக் கொண்ட பிரமாண்டமான கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



'ஸ்வதேஷ்' கண்காட்சி


இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் வருவதால், பிரம்மாண்ட திறப்பு விழாவில் மூன்று நிகழ்ச்சிகளுடன் 'ஸ்வதேஷ்' எனப்படும் கலை மற்றும் கைவினைக் கண்காட்சியும் இடம்பெறும். தி கிரேட் இந்தியன் மியூசிகல்: நாகரிகம் டு நேஷன் (இசை இரவு) , இந்தியா இன் ஃபேஷன் (ஆடை கலை கண்காட்சி) மற்றும் சங்கம் சங்கமம் (காட்சி கலை நிகழ்ச்சி) ஆகியவை நடைபெற உள்ளது. இந்த வெளியீட்டுத் திட்டம் இந்தியாவின் கலாச்சாரம், கலை மற்றும் மரபுகளின் பன்முகத்தன்மை மற்றும் உலகில் அவற்றின் தாக்கத்தை ஆராயும் விதமாக இருக்குமென உறுதியளிக்கப் படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: GT vs CSK IPL 2023: ஐ.பி.எல். தொடக்க போட்டி..! நேருக்கு நேர் மோதும் சென்னை - குஜராத்..! வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?


பிரம்மாண்ட கட்டமைப்பு


இந்த கலாச்சார மையமானது இந்தியாவின் கலாச்சார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், கலைத் துறையில் இந்தியா மற்றும் உலகின் சிறந்தவற்றை பலப்படுத்துவதற்கும் மற்றொரு உறுதியான அடியை எடுத்து வைக்கும். 2,000 இருக்கைகள் கொண்ட கிராண்ட் தியேட்டர், 250 இருக்கைகள் கொண்ட ஸ்டுடியோ தியேட்டர் மற்றும் 125 இருக்கைகள் கொண்ட தி கியூப் ஆகிய மூன்று கலை அரங்குகளை NMACC கொண்டுள்ளது. காட்சி கலைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நான்கு மாடி கலை இல்லத்தையும் இது கொண்டுள்ளது.






புனித பயணம்


பிரமாண்ட திறப்பு விழாவிற்கு முன், இந்தியாவின் கலாச்சார மையத்தில் பணிபுரிவது ஒரு வகையான "புனித பயணம்" என்று அம்பானி கூறினார். "இந்த கலாச்சார மையத்தை உயிர்ப்பிப்பது ஒரு புனிதமான பயணமாகும். சினிமா மற்றும் இசை, நடனம் மற்றும் நாடகம், இலக்கியம் மற்றும் நாட்டுப்புறவியல், கலை மற்றும் கைவினைப்பொருட்கள், அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றில் எங்கள் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் கொண்டாடுவதற்கும் ஒரு இடத்தை உருவாக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இது இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் காண்பிக்கும் இடமாகும், மேலும் உலகின் சிறந்தவற்றை இந்தியாவிற்கு வரவேற்போம்," என்று அம்பானி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


அறிக்கையின்படி, குழந்தைகள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அணுமதியுடன் இந்த நிகழ்வு நடக்கவுள்ளது. இது சமூகத்தை வளர்க்கும் திட்டங்களிலும் கவனம் செலுத்தும். மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தின் மையப்பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டருக்குள் இந்த கலாச்சார இடம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.