இந்தியாவுக்கு சீனாவுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. 2020 முதல் இந்தியாவும் சீனாவும் எல்லை பிரச்சனையில் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ள இடமான கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பாட்டியாலா பிரிகேட் திரிசூல் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் குழு பங்கேற்று விளையாடியுள்ளனர்.
பாட்டியாலா பிரிகேட் திரிசூல் குழுவிற்கு பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையில் உள்ள மிக உயரமான பகுதியில் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டையொட்டி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங்கை புதுதில்லியில் சந்தித்துப் பேசிக்கொண்டு இருக்கும்போது இந்தப் போட்டி நடைபெற்றுள்ளது.
கிரிக்கெட் எங்கு விளையாடப்பட்டது என்ற சரியான இடம் இந்திய இராணுவத்தால் வெளியிடப்படவில்லை என்றாலும், ஜூன் 2020 இல் இரு படைகளின் வீரர்களுக்கு இடையே பயங்கர மோதல் நடந்த இடத்திலிருந்து 5 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் அந்த இடம் இருக்கலாம் என்று செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
கால்வான் மோதல்
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 15 தேதி அன்று, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே எல்லைப் பிரச்சனை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் அதிகமாக இருந்தது, சீன வீரர்கள் அப்பகுதியில் எல்லை மீறி ரோந்து சென்று இந்திய எல்லைக்குள்ளும் வரத்தொடங்கினர்.
இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் முகாம் அமைத்து இருப்பதைக் கண்ட இந்திய ராணுவப் படையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஜூன் 15 இரவு, சீன வீரர்கள் அடங்கிய பெரிய குழு ஒன்று இந்திய வீரர்களை தடி, ஆணி பதித்த குச்சிகள் மற்றும் கம்பிகளால் தாக்கினர். மேலும், இந்திய தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றாலும், கைகளால் சண்டயிட்டும் மற்ற கூர்மையான பொருட்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த திடீர் மோதலில் இந்திய ராணுவத்தின் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலின் போது ஏராளமான சீன வீரர்களும் கொல்லப்பட்டனர்.
மோதலுக்குப் பிறகு, இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தளபதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முறை சந்திப்புகள் நடத்தப்பட்டு, சர்ச்சையை தீர்க்கவும், மேலும் மோதல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.