“இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்” என்றார் மகாத்மா காந்தி. அந்த சுதந்திரத்தை நாம் இன்னும் அடையவில்லை. தேநீர் கடையில் ஒரு பெண் டீ குடிக்கச் சென்றாலே மேலும் கீழும் பார்க்கும் சமூகம்தான் இன்னமும் இருக்கிறது.


இருந்தாலும் பிற்போக்குத் தனங்களுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைத்து பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என பல விஷயங்களிலும் தங்களை முன்னேற்றிக் கொள்ள தோதான சூழலை சில நகரங்கள் உருவாக்கித் தந்துள்ளன. ஆம் இந்திய நகரங்கள் தான். 


அவ்வாறான சூழலை உருவாக்கித் தந்துள்ள டாப் 5 இந்திய நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது அவதார் குழுமம். இந்தியாவில் பெண்களின் நிலை என்ற தலைப்பில் அந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் Social Inclusion Score (SIS) , Industrial Inclusion Store (IIS) அதாவது சமூக சேர்த்தல் மதிப்பீடு, தொழிற்சாலை சேர்த்தல் மதிப்பீடு என்று இரண்டு மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை பெண்களுக்கு சாதகமான பணிச் சூழல், தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பணி வழங்குவதில் கொடுக்கப்படும் முன்னுரிமை உள்ளிடவற்றை கணக்கில் கொள்கிறது.


இதற்காக இந்தியாவில் 111 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் டெல்லி, நாக்பூர், அவுரங்காபாத், ஃபரிதாபாத்தில் தொழில் ரீதியான சாதகமான சூழல் நிலவுகிறது. புதுச்சேரி, விசாகப்பட்டினம், சூரத், பிலாஸ்பூரில் தொழில் ரீதியான சாதக சூழல் பெண்களுக்கு இல்லை.


பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள் ஆகியனவற்றை முன்னெடுக்கும் சமூக சாதக சூழலைப் பொறுத்தவரையில் சென்னை உள்ளிட்ட சில நகரங்கள் முன்னேறிய இடத்தில் உள்ளன.


* சமூக ரீதியாகவும், தொழில்வள ரீதியாகவும் பெண்களுக்கு சாதகமாக தமிழகத்தில் 8 நகரங்கள் டாப் 10 நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


* கேரளா நகர பாதுகாப்பில் முதலிடத்தில் உள்ளது.


* டெல்லி இதில் கொஞ்சம் பின் தங்கியே உள்ளது.


* தென்னிந்திய நகரங்களே பெண்களுக்கு எல்லாவிதத்திலும் சாதகமான நகரங்களாக இருக்கின்றன.


மொத்தத்தில் இந்தியாவைப் பொறுத்தவரை தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தியா பெண்களுக்கு தொழில் ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் சாதகமான பகுதிகளாக உள்ளது.


ஹூப்ளி, நாக்பூர், அகமதாபாத், கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் பெண்கள் வேலைவாய்ப்பைப் பொறுத்த வரையில் ஆரோக்கியமான பங்களிப்பை தருகின்றன.


அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:


சென்னை, புனே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோயம்புத்தூர், மதுரை ஆகியன டாப் 10 நகரங்களில் உள்ளன. அதாவது 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பெண்களுக்கு தோதான நகரங்களாக உள்ளன.


திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, ஷிம்லா, மங்களூரு, திருவனந்தபுரம், பெலகாவி போன்ற நகரங்கள் 10 லட்சத்துக்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மகளிருக்கு உகந்த நகரங்களாக உள்ளன.


வட இந்தியாவைப் பொறுத்த வரை டெல்லி, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.


தென் இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன.


கிழக்குப் பகுதியில் கொல்கத்தா, தன்பாத், பாட்னா முறையே ஒன்று, இரண்டு, மூன்றாம் இடங்களைப் பிடிக்கின்றன.


மேற்குப் பகுதியில் புனே, மும்பை, அகமதாபாத் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன.


மத்திய பகுதியில் ராய்பூர், இந்தூர், போபால் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன.


மாநில சராசரியைப் பொறுத்தவரை கேரளா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிராம் இமாச்சல், கர்நாடகா அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.


இந்த அறிக்கை லேபர் ஃபோர்ஸ் சர்வே, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, குற்ற ஆவணங்கள், குடும்ப நல சர்வே, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக வருடாந்திர அறிக்கை ஆகியனவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.