ஜம்மு காஷ்மீரில்  ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் ஏற்பட்ட போக்குவரத்து தடைபாட்டால், கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு இந்திய ராணுவத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

  


ஜம்மு - காஷ்மீரின்  குப்வாராவில் ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணிப் பெண், சிவில் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் இந்திய ராணுவத்தால் விமானம் மூலம்  ஸ்ரீநகருக்கு கொண்டு வரப்பட்டதாக இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.


அறிக்கையின்படி, பனி மூடிய மங்காட் பகுதியில் இருந்து மோசமான வானிலைக்கு மத்தியில் குல்சுமா அக்தர் என்ற கர்ப்பிணிப் பெண்மணி(25), சனிக்கிழமை மீட்கப்பட்டார். காரி தெஹ்சிலில் உள்ள ஹர்காமில் உள்ள சர்பஞ்ச்சில் உள்ள கிராமவாசிகள் அருகில் உள்ள ராணுவப் பிரிவுக்கு அவசர அழைப்பு விடுத்து, கடுமையான நிலையில் உள்ள கர்ப்பிணிப் பெண்ணை உடனடியாக மருத்துவ மனையிலிருந்து மீட்டு ஸ்ரீநகருக்கு கொண்டு செல்ல  கேட்டுக்கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 






”ராணுவத்தினருக்கு அழைத்த கிராம வாசிகள், ’கடுமையான பனிப்பொழிவு காரணமாக, சாலைகள் மிகவும் வழுக்கும் என்பதால் சாலைகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு அனுமதிக்காமல் முற்றிலுமாக அடைக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்’.  நிலைமையின் அவலநிலையை உணர்ந்து, இந்திய ராணுவத்தின் மீட்பு மற்றும் மருத்துவக் குழுக்கள், இந்த அவசர அழைப்பிற்கு உடனடியாக பதிலளித்தன" என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, செய்தி நிறுவனமான ANI அதே சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டது, அதில், "ஸ்ரீநகரில் ஆபத்தான நிலையில் உள்ள கர்ப்பிணிப் பெண்ணை விமானத்தின் மூலம் ஸ்ரீநகருக்கு வெளியேற்றுவதற்கு இந்திய இராணுவம் உதவியுள்ளது. இது சிறந்த மருத்துவத்திற்கு வழிவகுக்கும் ஒரே உதாரணமாக செய்யப்பட்டது. NH 701 வழியாக ஸ்ரீநகரில் உள்ள சாலைகள் கடந்த 7 நாட்களாக இடைவிடாத பனிப்பொழிவு காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளன." எனத் தெரிவித்துள்ளது. 


பிடிஐ அறிக்கையின்படி, இராணுவ ஆம்புலன்ஸ் காத்திருக்கும் அக்னாரி கிராமத்திற்குச் செல்வதற்கு, வீரர்கள் 14 கிலோமீட்டர் தூரம் நான்கு முதல் ஆறு அடி வரை பனியில் நடந்து செல்ல வேண்டியிருந்தது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.


மேலும், அந்த பெண் வெற்றிகரமாக பனிஹாலில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பனியால் மூடப்பட்ட பகுதிகள் வழியாக மோசமான வானிலை மூலம் ஆறு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கர்ப்பிணிப் பெண் மீட்கப்பட்டுள்ளார்,  இராணுவத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை  இந்த செயல் மீட்டெடுத்ததாகவும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 


இராணுவ மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு குடும்பத்தினர் இராணுவத்தினர் உடனடி பதில் மற்றும் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற சரியான நேரத்தில் உதவியதற்காக நன்றி தெரிவித்துள்ளனர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய இந்திய ராணுவத்திற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.