சமீபத்தில், உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள கிராண்ட் ஓமாக்ஸ் குடியிருப்பு வளாகத்திற்கு போலீஸ் அலுவலர்களுடன் வந்த அதிகாரிகள், பாஜக நிர்வாகியான ஸ்ரீகாந்த் தியாகியின் சட்டவிரோத கட்டிடத்தை இடித்தார்கள்.
தியாகி, பெண் ஒருவருக்கிடையே நடைபெற்ற கடும் வாக்குவாதம் ஹவுசிங் சொசைட்டியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தியாகியின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
நொய்டா காவல்துறை தியாகிக்கு எதிராக குண்டர் சட்டத்தைப் பிரயோகித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டியில் தியாகிக்கும் பெண் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தியாகி சில மரக்கன்றுகளை நட விரும்பினார். ஆனால் அந்த பெண் விதிகளை மீறியதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, தியாகி அந்த பெண்ணை தகாத வார்த்தைகளை சொல்லி திட்டு தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இசம்பவத்தின் வீடியோ வைரலான நிலையில், தியாகி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கிராண்ட் ஓமாக்ஸ் குடியிருப்பு வளாகத்திற்கு இன்று காவல்துறை அலுவலர்கள் மீண்டும் வந்திருந்தனர். அங்கிருந்த சட்ட விரோத கட்டிடங்களை புல்டோசரை கொண்டு இடித்து தள்ளுவதற்காக அலுவலர்கள் வந்திருந்தனர்.
குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள் ஆரம்பத்தில் சொசைட்டியின் நுழைவு வாயிலை பூட்டிவிட்டு, வாயிலுக்கு வெளியே தர்ணாவில் (உள்ளிருப்பு போராட்டம்) அமர்ந்தனர். தங்கள் வீடுகளை இடிக்காமல் விட்டுவிடுமாறு அதிகாரிகளை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இருப்பினும், பலத்த காவல்துறை பாதுகாப்புடன், சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டதாகக் கூறப்படும் கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் தியாகியின் சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்பட்டு ஒரு மாதமான நிலையில், மற்ற கட்டிடங்கள் இன்று இடிக்கப்பட்டது.
தன்னுடைய கட்டிடங்கள் மட்டும் இடிக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட விரோதமாக கட்டப்பட்ட மற்றவரின் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை என காவல்துறையின் நடவடிக்கை குறித்து தியாகியின் மனைவி அனு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மற்ற கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு, குடியிருப்பின் பொதுவான பகுதியில் அனு தியாகி சட்டவிரோதமாக 20 மரங்களை நட்டார். தனது குடியிருப்பு இடிக்கப்பட்டது போல, குடியிருப்பு வளாகத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டுமானங்களையும் இடிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஒட்டுமொத்த குடியிருப்பு வளாகத்திற்கும் நோட்டீஸ் அளித்த நொய்டா ஆணையம், 48 மணி நேரத்தில், அதாவது வெள்ளிக்கிழமைக்குள், அனைவரும் தங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், இல்லையெனில் அது வலுக்கட்டாயமாக இடிக்கப்படும் என எச்சரித்திருந்தது. அந்த வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.