PM Modi: இந்தியாவின் பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை குறிப்பிட்டு, இதுதான் நமது இலக்காக இருந்ததா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
அமெரிக்காவீன் தலையீடு:
பஹ்லகாம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தந்ததை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் தீவிர போர் வெடிக்கக் கூடும் என்ற சூழல் நிலவியது. இந்நிலையில் தான், நேற்று மாலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “அமெரிக்கா நடுவராக செயல்பட்ட நீண்ட இரவு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள்” என குறிப்பிட்டு இருந்தார். அதனடிப்படையில் இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில் நடந்து வந்த மோதல்களும் முடிவுக்கு வந்துள்ளன.
முதுகெலும்பு இல்லையா?
1971ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் உடனான போரின்போது அமெரிக்க சமரசம் பேச முயன்றது. அதனை நிராகரித்து பேசிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, “எங்களது முதுகெலும்புகள் நிமிர்ந்து நேராக உள்ளன. அராஜகங்களுக்கு எதிராக போராட தேவையான தைரியமும், ஆதாரங்களும் உள்ளன. மூன்றாயிரம் நான்காயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் அமர்ந்துகொண்டு, நிறத்தின் அடிப்படையில் தங்களை தலைமையாகக் கருதிகொண்டு, அவர்களது விருப்பப்படி இந்திய செயல்பட வேண்டும் என கட்டளை இட்ட காலங்கள் உருண்டோடி விட்டன” என பேசி இருந்ததை காங்கிரஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆனால், தற்போது உள்நாட்டு பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது என்பது முன் இப்போதும் இல்லாத நடவடிக்கை எனவும் காங்கிரஸ் சாடியுள்ளது.
அமெரிக்காவின் சமரசம் தான் உங்கள் இலக்கா?
AIMIM தலைவர் ஓவைசி மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், “நாட்டிற்கான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபரை காட்டிலும் நமது பிரதமர் அறிவிப்பதையே எதிர்பார்க்கிறேன். எப்போதும் மூன்றவாது தரப்பினரை அனுமதிக்காத நாம், இப்போது அதனை ஏற்றது ஏன்? நமது உள்நாட்டு விவகாரமான காஷ்மீர் பாதுகாப்பு, சர்வதேச பிரச்னையாக மாற்றப்படாது என நம்புகிறேன். அமெரிக்க நடுவராக செயல்பட்ட இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் என்ன? பாகிஸ்தான் தனது தீவிரவாதத்தை இந்தியா பயன்படுத்தாது என அமெரிக்கா உத்தரவாதம் அளித்ததா? அமெரிக்க நடுவராக செயல்பட வேண்டும் என்பது தான் இந்தியாவின் இலக்கா?” எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
”நாடாளுமன்றம் கூட வேண்டும்”
”இந்தியாவிற்கான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் அறிவிப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்” என ஆர்ஜேடி எம்.பி., மனோஜ் ஜா வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதேபோன்று, உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஏன்? என பாஜகவையும், பிரதமர் மோடியையும் நோக்கி பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இதனிடையே, அமெரிக்க அதிபரின் அறிவிப்பை தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று இரவு தனது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன் முடிவில், எதிர்காலத்தில் ஏதேனும் தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறினால், அது போர் நடவடிக்கையாகவே கருதப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.