IND PAK Tensions: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நிறுத்துவதாக நேற்று மாலை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அமைதி ஒப்பந்தம்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக கடந்த 7ம் தேதி, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. எல்லையில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். ட்ரோன் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானை ஒட்டியுள்ள மாநில பகுதிகளில் கடும் பரபரப்பு நிலவியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக ஜம்மு & காஷ்மீரில் நாள் முழுவது வெடிசத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து, வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். இந்நிலையில் தான், இருநாட்டு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டு, தாக்குதல்கள் கைவிடப்பட்டுள்ளன. இதன் விளைவாக எல்லையோர பகுதிகளில் மீண்டும் இயல்புநிலை திரும்பியுள்ளது.
காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி:
சுமார் 3 நாட்களுக்குப் பிறகு பொதுமக்கள் இயல்பாக வெளியில் நடமாட தொடங்கியுள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால், போர் தொடங்கிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த மக்கள் தற்போது பெருமூச்சு விடதொடங்கியுள்ளனர். காலையில் எழுந்து பணிக்கு செல்வது, டீ கடைக்கு செல்வது, நடைபயிற்சி மேற்கொள்வது போன்ற அன்றாட பணிகளை மேற்கொண்டுள்ளனர். நாங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் இந்த அமைதியை மட்டுமே என, எல்லையோர மக்கள் வலியுறுத்துகின்றனர். அதேநேரம், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.