டிசம்பர் 8 - நீலகிரி மாவட்டம், குன்னூரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டரான Mi-17V5 விபத்துக்குள்ளானது. முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா உள்ளிட்ட 14 பேர் பயணித்த சாப்பர் விமானம் விபத்துக்குள்ளானபோது, அதிகாரிகள் குடும்பங்கள் மட்டுமல்ல, மொத்த தேசமும் ஆடிப்போனது.
குடியரசு தின கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கும் இந்த வேளையில், மீண்டும் அந்த தேசக் காவலர்கள் நினைவுகூறப்படுகிறார்கள். விபத்தில் உயிரிழந்த ப்ரிகேடியர் லிட்டரின் மனைவி கீத்திகா Shethepeople தளத்துக்கு சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அது உங்களுக்காக தமிழில்..
”அப்போ புனேவில இருந்தோம். 12-ஆம் வகுப்பு முடிச்சிருந்தேன். 17 வயசு இருக்கும் எனக்கு. பக்கத்து வீட்டுல ஒருத்தரைப் பாக்குறதுக்காக அவர் அடிக்கடி வருவார். ராணுவம் தொடர்பான ஒரு கோர்ஸை படிச்சிட்டு இருந்தார். பார்த்த உடனே பிடிச்சுது எங்க ரெண்டு பேருக்குமே. அதே வாரத்துல அவரை சில முறை சந்திச்சேன். என் மனசு முழுக்க அவர் இருந்தார். 22 வயசாச்சு. எம்.பி.ஏ படிச்சிட்டு இருந்தப்போ என் அம்மா, அப்பா எங்க காதலைப் பத்தி சொன்னேன். ராணுவ அதிகாரியான அப்பாவுக்கு அதில் உடன்பாடில்ல. உன்னால ஒரு ராணுவ வீரரின் மனைவியா இருக்கமுடியுமா? அவ்வளவு பக்குவம் இருக்கான்னு கவலைப்பட்டார்.
காதலும், காத்திருப்பும் உதவி பண்ணுச்சு. காத்திருந்து 1996-ஆம் ஆண்டு திருமணம் பண்ணிக்கிட்டோம். முதல் சில வருஷங்கள் ரொம்ப கஷ்டமா இருந்தது. நான் புனேவில் வேலையில் இருந்தேன். அவருக்கு வேற எங்கேயோ வேலை. எப்போதும் அவருக்கு கடிதங்கள் எழுதிக்கிட்டே இருப்பேன். 1999-ல அருணாச்சல பிரதேசத்தில் போஸ்டிங். போர் தொலைபேசி மூலமாதான் அவரோட பேச முடிஞ்சது. 2004-ஆம் ஆண்டு மகள் ஆஷ்னா பிறந்தாங்க. அவர் அடுக்கி வைக்கும் பொம்மைகளை ஆஷ்னா கலைப்பா. அதுல அவருக்குப் பெருமை. அவர் என்னோட சிறந்த நண்பன்.
டிசம்பர் 8, 2021: நியூஸ் பாத்தீங்களான்னு ஒரு தோழி பேசுனாங்க. விபத்து செய்தியைக் கேட்டதும் எலும்பு முறிவுகள் இருக்கலாம்னுதான் நான் பயந்தேன். கனவிலும்நினைக்காத அந்த செய்தி 5 மணிநேரத்துல கிடைச்சுது. டோனி போய்ட்டார். முன்னால் தெரியும் பாதை வெறுமையா இருக்கு. இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்னு ஆஷ்னா கிட்ட சொல்லி இருக்கேன். அவரை நினைக்கிறதை ஒரு நாளும் நிறுத்தப்போறதில்ல. அவருடைய நினைவுகள் அப்படியே இருக்கு. இன்னும் எத்தனை வருஷங்கள் கழிச்சு லிட்டரின் மனைவின்னு சொல்லி பேச ஆரம்பிச்சாலும், அவரை எல்லாருக்கும் நினைவிருக்கும்.. அவர் எப்போதுமே வாழ்வார்” என்றார்.