தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில் அடுத்த ஆறு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், தெற்கு கேரளா, குமரிக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுகிறது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

Continues below advertisement

வரும் அக்டோபர் 21ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி தென்கிழக்கு வங்கக்கடலில் மண்டலமாக வலுப்பெறும்  என தெரிகிறது. எனவே அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும். வரும் அக்டோபர் 23 முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. நாளை தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 11 மாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரம், லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.

Continues below advertisement

அக்டோபர் 21ம் தேதி காலைக்குள்  ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் என்ற அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இடிக்கி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக குமுளி, நெடுங்கண்டம், கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டில் உள்ள மக்கள் வீட்டின் மேல் தளத்திற்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிலர் பாதுகாப்பு கருதி வீடுகளில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு தங்கும் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எர்ணாகுளம், பட்டினம்திட்டா, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை கொட்டியது.

பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். கல்லார், கூட்டார், நெடுங்கண்டம், தூவல் உள்பட பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. நெடுங்கண்டம் பகுதியில் சாலைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேன் உள்பட பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அதன்படி தற்போதைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 139.30 அடியாக இருந்தது. இதனால் அணையின் 13 மதகுகளும் ஒன்றரை மீட்டர் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கேரளாவில் மேலும் 5 நாள் மழை நீடிக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. திருவனந்தபுரம், பாலக்காடு, இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட 8 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.