கேரள மாநிலம் மலப்புரத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து நேர்ந்த கோர விபத்தில் பலியானவரகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
மலப்புரத்தில் படகு கவிழ்ந்து விபத்து:
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் பயணித்த சுற்றுலா படகு, மாலை 7 மணியளவில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அந்த படகில் 30 பேர் வரையில் பயணித்ததாக கூறப்படும் நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 4 பேர் குழந்தைகள் ஆகும். அதேநேரம், உயிரிழந்தவர்கள் யார் என்பது தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
மீட்பு பணிகள் தீவிரம்:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 20 பேர் மீட்கப்பட்டு அருகே உள்ள வெவ்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதிய வெளிச்சமின்மை காரணமாக மீதமுள்ளோரை தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.