டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சர்வதேச எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத் தலைவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.
” எழுத்தறிவு பெற வேண்டும் “:
நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் இன்றே உறுதி ஏற்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். நாம் ஒருவரை எழுத்தறிவுள்ளவராக மாற்றும்போது, அவரை அறியாமையில் இருந்து விடுவித்து அவரை கண்ணியமாக உணர வைக்கிறோம் என குறிப்பிட்டார்.
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (08.09.2024) நடைபெற்ற சர்வதேச எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், ஆணோ, பெண்ணோ, குழந்தையோ, சிறுமியோ என யாராக இருந்தாலும் ஒருவருக்கு கல்வி அளிப்பதன் மூலம் நாம் பெறும் மகிழ்ச்சி அளவிட முடியாதது என்றார்.
கல்வி என்பது எந்த வகையிலும் ஒருவரிடம் இருந்து பறிக்க முடியாத ஒன்று என அவர் தெரிவித்தார். அதை பகிர்ந்து கொண்டே இருக்கும் வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். எழுத்தறிவை ஆர்வத்துடன் அதிகரித்தால், நாளந்தா, தக்ஷசீலா போன்ற கற்றல் மையமாக இந்தியா தனது பழைய நிலையை மீண்டும் அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய தேசியக் கல்விக் கொள்கை:
புதிய தேசியக் கல்விக் கொள்கையை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த அவர், இந்த கொள்கை தேசத்திற்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்றார்.
இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கை நமது இளைஞர்கள் தங்கள் திறமையையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கிறது எனவும் அனைத்து மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
தாய்மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜக்தீப் தன்கர், இந்தியாவின் இணையற்ற மொழிவாரி பன்முகத்தன்மை குறித்து விரிவாகப் பேசினார். மொழியின் செழுமையைப் பொறுத்தவரை, பல மொழிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான தேசம் இந்தியா என்று அவர் குறிப்பிட்டார்.
ஆறு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு நபரையாவது கல்வியறிவு பெறச் செய்ய அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை எடுத்துரைத்து குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் பாராட்டுத் தெரிவித்தார்.