Telangana Assembly Elections 2023:  தெலுங்கானாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. 

 

தெலங்கானா சட்டமன்ற தேர்தல்:


 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே 4 நான்கு மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று கடைசி மாநிலமாக தெலங்கானாவில் வாக்குப்பதிவு தொடங்கியது. 

 

தெலங்கானாவில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளிக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில் 106 தொகுதிகளுக்கு மாலை 5 மணி வரையிலும், இடதுசாரி தீவிரவாதம் அதிகமுள்ள 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வாக்குச்சாவடிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சாதாரண மக்கள் முதல் திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினர். 

 


வாக்குப்பதிவு நிலவரம் என்ன?


 

மதியம் ஒரு மணி வரை மாநிலம் முழுவதும் 36.68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை ஐந்து மணி நிலவரப்படி 63.94 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்டப்படி மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு எந்திரங்களை சீலிட்ட அதிகாரிகளை அதை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். 

 





 

மொத்தமுள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு  அம்மாநில முதலமைச்சர் கேசிஆர், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி, பாஜக மக்களவை உறுப்பினர்கள் பி.சஞ்சய் குமார், டி.அரவிந்த் உட்பட மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களமிறங்கி போட்டியிட்டுள்ளனர்.

 

மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் தனது வேட்பாளர்களை 119 இடங்களிலும்,  பாஜக 111 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டது. காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) ஒரு இடத்தை அளித்து, மீதமுள்ள 118 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. ஐதராபாத் நகரின் 9 தொகுதிகளில் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

 

ஐந்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.