இன்று வாக்கு பதிவில் கலந்துக்கொண்டு ஜனநாயகத்தை வலுப்பெற செய்வதற்கான நாள் என எம்.எல்.சி கவிதா தெரிவித்துள்ளார்.


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தெலங்கானா சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவானது தொடங்கியுள்ளது. அங்கு யாருக்கு மக்கள் ஆதரவு அளிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


ஆளும் பாரத ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 பிரதான கட்சிகள் இடையே அங்கு பலத்த போட்டி நிலவுகிறது. இது தவிர ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களம் காண்பதால் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்நிலையில் பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த கவிதா தேர்தலில் வாக்களிக்க புறப்பட்ட போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ஆண்கள், பெண்கள், இளம் தலைமுறையினர் என அனைவரும் தேர்தலில் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோளாக கேட்டுக்கொள்கிறேன். இன்று விடுமுறை நாள் அல்ல அனைவரும் வாக்குப்பதிவில் கலந்துக்கொண்டு ஜனநாயகம் வலுபெற செய்வதற்கான நாள். 2018-ம் ஆண்டு மக்கள் எப்படி பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ஆதரவளித்தனரோ, அதே நிலைமையே இந்த முறையும் காணப்படுகிறது. மக்கள் இந்த முறையும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்.






எங்கள் மக்களை நாங்கள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளோம், எங்கள் டிஎன்ஏ எங்கள் மக்களுடன் ஒத்துப்போகிறது. இப்போது பெரிய அளவிலான பிராந்தியக் கட்சிகளாக மாறிவிட்ட தேசியக் கட்சிகள் போலல்லாமல் நாங்கள் எப்போதும் மக்கள் பிரச்சனைக்கு செவி சாய்ப்போம். தேசிய கட்சிகள் முன்பு போல் வலுவாக இல்லை. இருப்பினும் அவர்கள் மக்களை புரிந்துக்கொண்டுள்ளனர் என கூறுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உலகளாவிய அணுகுமுறையைக் கொண்டுள்ளனர் – அந்தந்த மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் மக்களை புரிந்துக்கொள்ளாமல் செயல்படுகின்றனர். தெலுங்கானாவிலும் இதே நிலைதான், காங்கிரஸும், பா.ஜ.க.வும் எங்களை போல் மக்களை அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. நாங்கள் மாநிலத்திற்காக போராடினோம், மாநிலத்திற்காக உழைத்தோம். மக்கள் பி.ஆர்.எஸ் –க்கு நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம்.  நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், நாங்கள் சதம் அடிக்கப் போகிறோம்” என தெரிவித்துள்ளார்.


தெலங்கானாவுக்கு முன்னதாக, சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டசபைகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள் உள்ள மாநிலம் முழுவதும் 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலுக்காக 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்துள்ளார்.