டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையை பார்வையிட இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு
 
வளர்ந்த மற்றும் வளரும் 20 நாடுகளின் கூட்டமைப்பாக இருக்கும் ஜி20 அமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகிக்கிறது. இதன் காரணமாக அந்த அமைப்பின் பல்வேறு கூட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அங்கு வர்த்தகம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்து இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த  கூட்டத்தில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


இப்படியான நிலையில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு  தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 30 நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. ஒருபுறம் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்


மறுபக்கம் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் 2 நாட்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் அதனை பொறுத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடி மக்களிடம் சில தினங்களுக்கு முன்னால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். 


அனுமதி இல்லை 


இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு இன்று (செப்டம்பர் 1) முதல்  செப்டம்பர் 10 ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குடியரசுத்தலைவர் இல்லம் அறிவித்துள்ளது. 11 ஆம்  தேதியில் இருந்து பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி20 மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.