மணிப்பூரில் கிட்டத்தட்ட கடந்த 4 மாதங்களாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வந்தாலும், தினம் தினம் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.


கடந்த 5ஆம் தேதி நடந்த வன்முறையில், தந்தை, மகன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்கிய நிலையில், அதை தீர்க்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. 


மணிப்பூரில் தொடரும் இனக்கலவரம்:


ஆனால், இதுவரை, மத்திய அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சுராசந்த்பூர் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு குழுக்களுக்கிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.


அதில், நேற்று முன்தினம் காயம் அடைந்த இருவர் இன்று உயிரிழந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது. இறந்தவர்கள் இசையமைப்பாளர் எல்.எஸ். மங்போய் (42) மற்றும் ரிச்சர்ட் ஹெம்கோலுன் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் சுராசந்த்பூரில் வசிப்பவர்கள்.


துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு ராணுவத்தை செல்ல விடாமல் தடுக்கும் பெண்கள்:


மெய்தேயி சமூக மக்கள் ஆதிக்கம் செலுத்தும் பிஷ்ணுபூரில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் இரு குழுக்கள் இடையே தீவிர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்த பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினரை வரவிடாமல் மெய்தேயி சமூகத்தை சேர்ந்த பெண்கள் தலைமையிலான குழுக்கள் தடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.


இதுகுறித்து பழங்குடி குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், "பள்ளத்தாக்கில் இருந்து கிராமங்களை நோக்கி மோட்டார் குண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால், கிராமத்தில் பாதுகாப்பிற்காக நிற்பவர்கள் இறந்துள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது" என்றனர்.


கௌசாபுங், காங்வாய், சுக்னு போன்ற பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறி, சுராசந்த்பூரில் அவசரகால பணிநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது பழங்குடித் தலைவர்கள் மன்றம் (ITLF).


கடந்த மே 3 ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து பழங்குடியின சமூகத்தை உற்சாகப்படுத்த, குக்கி-ஜோமி மக்கள் இயக்கத்திற்காக ஐ காம் ஹிலோ ஹாம் (இது எங்கள் நிலம் இல்லையா?” என்ற பாடலை இயற்றியவர் இறந்தவர்களில் ஒருவரான மங்போய்.
நேற்று, கிராமத்தில் காவலுக்கு நின்று கொண்டிருந்தபோது, ​​அவரது தலையில் அம்பு விடபட்டது. அவர் மருத்துவ சிகிச்சைக்காக அண்டை மாநிலமான மிசோரமில் உள்ள ஐஸ்வாலுக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


செவ்வாயன்று, அதே பகுதியில் உள்ள கொய்ரென்டாக்கில் நடந்த வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். எட்டு பேர் காயமடைந்தனர். இனக்கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பழங்குடி சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் குழு, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர்.


அப்போது, மணிப்பூரில் இருந்து தனி நிர்வாகத்தை கோரி குக்கி சோ பழங்குடி மக்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.  ஆனால், மத்திய அமைச்சர் அமித் ஷா தரப்பில் இருந்து எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் தகவல் தெரிவித்தனர்.