பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. ஞானவாபி, மதுரா போன்ற இடங்களில் அமைந்துள்ள மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும் என இந்துத்துவ சிந்தனையாளர்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, இஸ்லாமிய பெயர்கள் கொண்ட இடங்களுக்கு இந்து பெயர்கள் வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.


புது சர்ச்யைை கிளப்பிய விஷ்வ இந்து பரிஷத்:


சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இன்று புதிய சர்ச்சை வெடித்துள்ளது. சீதா என்ற பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.


எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இன்றி, இரு சிங்கங்களையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்கும் வனத்துறையின் முடிவுக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கொல்கத்தா உயர் நீதிமன்ற ஜல்பைகுரி கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அந்த மனுவில், "உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களும் ராமரின் மனைவியான சீதையை தெய்வமாக கருதி வழிப்பட்டு வருகின்றனர். அந்த பெயரை சிங்கத்திற்கு வைத்திருப்பதை அறிந்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மன வேதனை அடைந்துள்ளது. இது, தெய்வ நிந்தனைக்கு இணையான செயலாகும். அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதலாகும்.


சீதை சிங்கத்துடன் அக்பர் சிங்கம் வைத்திருக்க எதிர்ப்பு:


சிங்கங்களுக்கு மாநில வனத்துறை பெயர் சூட்டியுள்ளது. மேலும், 'அக்பர்' சிங்கத்துடன் 'சீதா' சிங்கத்தை வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயலாகும். சிங்கத்தின் பெயரை "சீதா" என்பதிலிருந்து வேறு ஏதேனும் பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மதத்துடன் தொடர்பில்லாத பெயரைக் கொண்டு விலங்கின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விஷ்வ இந்து பரிஷத் குறிப்பிட்டுள்ளது. 


நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா முன்பு, இந்த மனு நேற்று பட்டியலிடப்பட்டது. இதையடுத்து, வரும் 20ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெறுகிறது.


திரிபுராவில் உள்ள செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து வங்கத்தில் உள்ள சஃபாரி பூங்காவிற்கு இந்த சிங்கங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பூங்காவிற்கு கொண்டு வருவதற்கு முன்பே இந்த பெயர்தான் வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


பதினாறாம் நூற்றாண்டில் முகலாய சாம்ராஜ்ஜியத்தில் மூன்றாவது பேரரசராக இருந்தவர் அக்பர். அதே சமயம், இந்து மதத்தில் தெய்வமாகக் கருதப்படுபவர் சீதை. ராமரின் மனைவி. வால்மீகி ராமாயணத்தில் இவரை பற்றி குறிப்புகள் இருக்கின்றன.