விஷால் கர்க்கின் Better.com நிறுவனம், கடந்த டிசம்பருக்கு பிறகு இரண்டு முறை கொத்தாக பணிநீக்கம் செய்த பிறகு, தற்போது இந்தியாவில் அதன் நிறுவன ஊழியர்களுக்கு தானாக முன்வந்து வெளியேறுவதற்கான ஆப்ஷனை வழங்கியுள்ளது. இதன்மூலம் தற்போதுவரை 920 ராஜினாமாக்கள் ஏற்கனவே வந்துவிட்டதாக கூறப்படுகிறது.


கடந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு முன்பு ஜூம் காலின் மூலம் 900 பணியாளர்களை கர்க் பணிநீக்கம் செய்தது பெரும் சர்சைக்குள்ளாகி இருந்தது. கடந்த மார்ச் மாதம், அன்னையர் தினத்தன்று அமெரிக்கா மற்றும் இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட சுமார் 4,000 ஊழியர்களை நிறுவனம் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.



ஒரு அறிக்கையில், நிலையற்ற மார்க்கெட் காரணமாக ஏற்படும் சவால்களை சமாளிக்க முடியாத காரணத்தால் பணிநீக்கங்கள் செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது, என்று நிறுவனம் கூறியது. ஆனால் முன்னதாக விஷால் கர்க் பெட்டர்.காம் நிறுவன ஊழியர்களுக்கு உத்தரவாதம் ஒன்றை அளித்திருந்தார். 1.5 பில்லியன் டாலரில் இருந்து 750 மில்லியன் டாலரை சாப்ட் பேங்க் மூலம் பெட்டர்.காமுக்கு செலுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இது அவர் தனிப்பட்ட முறையில் தரும் உத்தரவாதம், அதிலிருந்து ஏதாவது இழப்பு ஏற்பட்டால் நிறுவனத்திற்கு தொடர்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Aurora Acquisition Corp மற்றும் SoftBank ஆகியவை ஒப்பந்தம் முடிவடையும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, அவர்கள் முதலீடு செய்துள்ள $1.5 பில்லியனில் பாதியை பெட்டர்.காம் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக, அவர்களின் நிதி ஒப்பந்தத்தின் விதிமுறைகளை திருத்த முடிவு செய்துள்ளதாக கடந்த நவம்பரில்  நிறுவனம் அறிவித்திருந்தது. 



அரோரா தாக்கல் செய்த அறிக்கையில், "பெட்டர்.காமின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கர்க் தனது தனிப்பட்ட அக்கவுன்டில் இருந்து பெட்டர் டாட் காமுக்கு தர ஒப்புக்கொண்டார், அதன்படி ஏற்படும் இழப்புகளுக்கு அவரே பொறுப்பேற்கலாம் அல்லது சில சூழ்நிலைகளில் SoftBank இல் இருந்து பணம் பெறலாம்" என்று கூறினார்.


இது குறித்து விஷால் தரப்பில் இருந்து, "எனக்கு சொந்தமாக இருக்கும் எல்லாவற்றிலும் நான் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறேன். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, எனது 50வது பிறந்தநாளில் அந்த SoftBank $750 மில்லியன் கடன் வரும்போது, ​​​​என்னிடம் எதுவும் இல்லை என்று அர்த்தம். அந்த செய்தி உண்மைதான், நான் தனிப்பட்ட முறையில் 750 மில்லியன் டாலர்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளேன், அதற்கு நான் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கிறேன்" என்று ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்தார்.


ஆனால் அவர் இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கு தானாக முன்வந்து ராஜினாமா செய்துகொள்ளலாம் என்னும் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதன்படி, 900 மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே ராஜினாமா மனு அளித்து அந்த மனுக்கள் ஏற்கவும் பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.