இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. ஒருநாள், டெஸ்ட், டி-20, ஐபிஎல் என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அசத்தி வரும் கோலி, இந்தியா மட்டும் இன்றி உலக அளவில் புகழ்பெற்றவர். சச்சின், தோனிக்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட்டை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றவர்.


இன்ஸ்டாகிராமில் 250 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள்:


கிரிக்கெட் ஒரு சில நாடுகளில் மட்டுமே விளையாடப்படுவதால் கால்பந்து விளையாட்டு வீரர்களை காட்டிலும் கிரிக்கெட் வீரர்கள் அந்த அளவுக்கு பிரபலம் இல்லை. ஆனால், கோலி விஷயத்தில் அப்படி இல்லை. இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் நபர்களில் ஒருவரான இவர், 250 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். 


அதிக இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை கொண்ட விளையாட்டு வீரர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார். தன்னுடைய பிரபலத்தால் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார் கோலி. சமூக வர்த்தக தளமான ஸ்டாக் குரோ, கோலியின் வருமானம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளது.


அதன்படி, கோலியின் மொத்த சொத்து மதிப்பு 1050 கோடி ரூபாய் என ஸ்டாக் குரோ கணக்கிட்டுள்ளது. இதன் மூலம், உலக அளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.


ஒரு ட்விட்டர் பதிவுக்கு 2.5 கோடி ரூபாய் வருமானம்:


இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கோலி, பிசிசிஐயிடம் இருந்து ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளமும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் இருந்து 15 கோடி ரூபாய் சம்பளமும் பெற்று வருகிறார். அதுமட்டும் இன்றி, தனியாக போட்டிக்கான ஊதியமும் தனியாக தரப்படுகிறது. சமூக ஊடகங்களில் தனது பிரபலத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கும் கிட்டத்தட்ட 9 கோடி (8.90 கோடி) ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். ட்விட்டர் பதிவிற்கு 2.50 கோடி ரூபாய் வசூலிக்கிறார்.


பல தொழில்களில் ஈடுபட்டு வரும் கோலி, ஸ்டார்ட்அப்களிலும் முதலீடு செய்துள்ளார். ஸ்டாக் குரோ வெளியிட்ட தகவலின்படி, 8 ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளார். அதே நேரத்தில், 18க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் விளம்பர தூதராக உள்ளார். ஒரு பிராண்டை விளம்பரம் செய்வதற்காக நாள் ஒன்றுக்கு அவருக்கு 7.5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது.


கோலிக்கு இரண்டு வீடுகள் சொந்தமாக உள்ளன. ஒன்று மும்பையிலும் மற்றொன்று குருகிராமிலும் உள்ளது. அதன் சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாகும். அவர் ஈட்டும் வருவாயின் மூலமே அவரது பிரபலம் குறையவில்லை என்றும் இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். பேட்டிங்கில் தனக்கென தனி முத்திரை பதித்த விராட் கோலி, கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக ஏ கிரேடு கிரிக்கெட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.