இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களுக்கு வலு சேர்க்கும் விதமாக 25 சாட்சியங்களின் வாக்குமூலம் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றது.


பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்:


இந்திய தண்டனைச் சட்டம் 354, 354A, 354D ஆகிய பிரிவுகளில் கீழ் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி காவல்துறை விசாரிக்க தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில், குற்றப்பத்திரிகை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 


நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்ஸி மாலிக் ஆகியோர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். ஆனால், மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.


குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யாமல் இருப்பது குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனை சாக்ஸி மாலிக்கும் அவரது கணவர் சத்யவர்த் காடியனும் வீடியோ மெசேஜ் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


அதில், மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை ஆதரித்ததற்காகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மத்தியஸ்தராக இருந்ததற்காகவும் மல்யுத்த வீராங்கனை பபிதா போகட்டுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.


மல்யுத்த வீராங்கனை பபிதா போகட் குற்றச்சாட்டு:


இதற்கு பதில் தரும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள பபிதா போகட், சாக்ஸி மாலிக்கை காங்கிரஸ் கட்சியின் கைப்பாவை என விமர்சித்துள்ளார். "நேற்று எனது சகோதரி (சாக்ஸி மாலிக்) மற்றும் அவரது கணவரின் வீடியோவைப் பார்க்கும்போது எனக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது. 


வாய் விட்டு சிரித்தேன். பிரதமர் மீதும், நாட்டின் நீதித்துறை மீதும் நம்பிக்கை வைத்து, உண்மை நிச்சயம் வெளிவரும் என்று முதல் நாளிலிருந்தே கூறி வருகிறேன். ஒரு பெண் வீராங்கனையாக, நாட்டின் அனைத்து வீரர்களுடனும் நான் எப்போதும் உடனிருந்தேன். இருப்பேன்.
ஆனால், நான் ஆரம்பத்திலிருந்தே போராட்டத்தை எதிர்த்தேன். 


நீங்கள் பிரதமரையோ அல்லது மத்திய உள்துறை அமைச்சரையோ சந்திக்க வேண்டும். அங்கிருந்துதான் தீர்வு வரும் என்று அனைத்து மல்யுத்த வீரர்களிடமும் கூறியிருந்தேன். காங்கிரஸ் தலைவர்கள் மல்யுத்த வீரர்களின் உணர்ச்சிகளை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துகின்றனர். காங்கிரஸின் கைப்பாவையாக சாக்ஸி மாலிக் செல்படுகிறார்" என குறிப்பிட்டுள்ளார்.


இந்த வழக்கை, 10 காவல்துறை அதிகாரிகள் கொண்ட ஆழு குழுக்கள் விசாரித்தன. இந்த வழக்கில் மொத்தம் 125 சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 25 சாட்சிகள் சிங்குக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர்.