தன் குட்டியுடன் தாய் யானை ஒன்று சதுப்பு நிலத்தில் மேயும் வீடியோ ஒன்று தற்போது ட்விட்டரில் வைரலாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவின் சதுப்பு நிலத்தில் தன் குட்டிக்கு இரை கொடுக்கும் தாய் யானையின் வீடியோ வைரலாக மாறியுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 


உண்பதற்காக புற்களை மடக்கியும், பிடுங்கியும் தாய் யானை நடந்து செல்வதோடு தொடங்குகிறது இந்த வீடியோ. தாய் யானை நல்ல புற்களைத் தேடி நடந்து கொண்டிருக்கையில், குட்டி யானை தாயின் பின்னால் நடந்து, தாயிடம் பால் குடிப்பதற்காக முயல்வதாக இந்த வீடியோ அமைந்துள்ளது. காசிரங்கா தேசியப் பூங்காவின் பயணிகளின் வழிகாட்டியான பிடுபான் கோலாங் என்பவர் இந்த வீடியோவைப் பதிவு செய்துள்ளார். 


`காசிரங்காவின் சதுப்பு நிலத்தில் தன் குழந்தைக்குப் பாலூட்டும் தாய் யானை’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டு, இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளது காசிரங்கா தேசியப் பூங்கா. 






இந்த வீடியோ தற்போது சுமார் 44 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது. நெட்டிசன்கள் இதனைக் கொண்டாடியதோடு, பயண வழிகாட்டியை இப்படியான அபூர்வ வீடியோவை எடுத்ததற்காகப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.


மற்றொரு வீடியோவில் யானைக் கூட்டம் ஒன்றில் புதிதாகப் பிறந்த குட்டி யானை ஒன்று நடமாடுவது, யானைக் கூட்டம் அருகில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் நீர் அருந்துவது முதலானவை பதிவு செய்யப்பட்டு, பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த வீடியோவும் அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. 






இன்னொரு வீடியோவில் வங்காளப் புலி ஒன்று நதியின் கரையோரம் கம்பீரமாக வாத்துக் கூட்டத்தைக் கடந்து நடந்து செல்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பலரும் பாராட்டியுள்ளனர்.