உத்தரப்பிரதேசத்தில் மோசமான தரத்தில் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு வருவதை சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. வீடியோ ஆதாரமாக வெளியிட்டுள்ளார். 


வாழும் வீடோ, படிக்கும் கல்வி நிறுவனங்களோ, வேலை பார்க்கும் தொழிற்சாலைகளோ எதுவாக இருந்தாலும் உறுதியான கட்டிடத்தில் இயங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவ்வப்போது ஏற்படும் விபத்துகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பொருளாதார சூழல் உட்பட இன்ன பிற காரணங்களால் கட்டிடங்கள் புதுப்பிக்கப்படாமல்,பழுது பார்க்காமல் இருப்பதை பல இடங்களில் காணலாம். 


ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மோசமான தரத்தில் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரின் ராணிகஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ டாக்டர் ஆர்.கே. வர்மா அங்கு கட்டப்பட்டு வரும் மாநில பொறியியல் கல்லூரியை ஆய்வு செய்வதற்காக  நேற்றைய தினம் சென்றுள்ளார். அப்போது அரசு பொறியியல் கல்லூரியின் விடுதி மற்றும் குடியிருப்பு வளாகத்தின் சுவரை உறுதித்தன்மையை சோதனை செய்வதற்காக கையால் தள்ளினார். 






ஆனால் எம்.எல்.ஏ. தள்ளியதில் கட்டுமான சுவரின் ஒரு பகுதி மொத்தமாக கீழே விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கல்லூரி கட்டுமானத்தில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். மேலும் குடியிருப்பாளர்களுக்காக ஒரு கல்லறை தயாராகி வருவதாகவும் ஆர்.கே.வர்மா கூறினார். இதுபோன்ற தரமற்ற கட்டுமானப் பணிகளால் இளைஞர்களின் எதிர்காலத்தை அரசாங்கம் தயார் செய்யாமல் மரணத்திற்கு வழி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பான வீடியோவையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை மேற்கொள்காட்டி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் லட்சணம் இதுதான் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சரமாரியாக விமர்சித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண