டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர், அவரது குடும்ப நிகழ்ச்சியில் சீருடையை அணிந்து கொண்டு உறவினர்களுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தென் மேற்கு டெல்லியில் உள்ள நாராயணா காவல் நிலையத்தின் பொறுப்பாளர் ஸ்ரீநிவாஸ். சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஒன்றில், 'Balam Thanedar' என்ற பிரபல பாடலுக்கு அவர் நடனமாடுவது பதிவாகியிருந்தது.
குடும்ப உறுப்பினர்களுடன் அவர் நடனமாடுவதை பலர் தங்களின் போன்களில் வீடியோவாக எடுப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
பாடல்களின் இசைக்கு ஏற்ப அவர் நடனமாடும்போது, சிலர் அவர் மீது கரன்சி நோட்டுகளை பொழிகின்றனர். ஸ்டைலான சன்கிளாஸ்களை போட்டு கொண்டு அவர் தொடர்ந்து நடனமாடுகிறார். பின்விளைகளை அறியாமல், குத்தாட்டம் போடும் படி அவரை பலர் ஊக்குவிக்கின்றனர்.
உறவினர் ஒருவரின் நிச்சயதார்த்த விழாவுக்கு அவர் சென்றதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நாளில், அவர் விடுப்பு எடுத்திருந்ததாகவும், ஆனால், பாடலுக்கு நடனமாடுவதற்காகவே அவர் சீருடை அணிந்ததாகக் கூறப்படுகிறது. சில காவல்துறை அதிகாரிகளும் அவருடன் வீடியோவில் காணப்படுகின்றனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட உடனேயே வைரலானது. காவல்துறை மதிப்பை அவர் சீர் குலைத்துவிட்டதாக பலர் விமர்சித்து வருகின்றனர். சீருடை அணிந்து நடனமாடியதால் மூத்த காவல்துறை அதிகாரிகள் அவர் மீது கோபமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பணியில் உள்ள அரசு அதிகாரிகள் இதுபோன்ற நடனமாடிய பல வீடியோக்கள் சமூகவலைகளில் வைரலாகி இருக்கிறது. சமீபத்தில், சேனியில் மருத்துவமனையின் அலுவலகத்தில் பணியின் போது பணியாளர்கள் சினிமா பாடலுக்கு ஒன்றாக நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில், செவிலியர் கண்காணிப்பாளர், ஆண் செவிலியர், பெண் செவிலியர் மருத்துவ பணியாளர் என ஐந்து நபர்கள் சமூக இடைவெளி இன்றி கை கோர்த்து குழுவாக சினிமா பாடலுக்கு ஏற்றார் போல் நடனம் ஆடியிருந்தனர்.
மருத்துவமனையில் பணியில் இருக்கும்போது செவிலியர்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.