தேசியக் கொடி என்றாலே அனைவருக்குள்ளும் ஒரு மரியாதை ஏற்படும். அதேநேரத்தில் தேசியக் கொடியினை பயன்படுத்தும் அல்லது தேசியக் கொடியினை கையாளும் வழிமுறைகள் என்பது அரசால் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் 75வது சுதந்திர தினத்தினை கொண்டாட மத்திய அரசு இந்தியாவில் உள்ள 20 கோடி வீடுகளில் கடந்த ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை தேசியக்கொடியை பறக்கவிட மத்திய அரசு கேட்டுக்கொண்டது.  இதனை ‘ஹர் கர் ட்ரியங்கா’என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாட  நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தது. இந்திய தேசியக் கொடியினை பறக்கவிடுவதற்கு விதிமுறைகள் உள்ள நிலையில் நாட்டின் 75 சுதந்திர தினத்தினை முன்னிட்டு, விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்தது. 


பொதுவாக தேசியக் கொடியை சூரியன் உதித்த பின்பு ஏற்றி சூரியன் மறைவதற்குள் இறக்கிவிடவேண்டும். அதேபோல, தேசியக் கொடியை அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளில் தான் ஏற்ற முடியும், ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய நாள்களில் தான் ஏற்றவேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் இருந்தது. 2002 ஆம் ஆண்டு "இந்திய தேசியக் கொடி சட்டம்" கீழ், இந்தியாவின் அனைத்து மக்களும் மூவர்ணக்கொடியை ஆண்டு முழுவதும் பயன்படுத்திக்கொள்ள உரிமை கிடைத்தது. இந்த விதிமுறைகளில் 2005ம் ஆண்டு மேலும் சில மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது. 






மாற்றம் செய்யப்பட்ட விதிமுறைகள்


இந்த நிலையில், கொடியை காலையில் ஏற்றி மாலையில் இறக்கிவிடவேண்டும் என்ற விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. இந்திய தேசியக்கொடி விதிமுறைகள் 2002 பிரிவு 7ல் உள்ள இரண்டாவது பத்தியில் மாற்றம் செய்துள்ளது. புதிய மாற்றத்தின் படி “பொதுவெளியில் பறக்கவிடப்படும் அல்லது பொதுமக்கள் வீட்டில் பறக்கவிடப்படும் கொடியானது பகல் மற்று இரவிலும் பறக்கலாம்” என்று திருத்தம் செய்துள்ளது. மேலும், இயந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பருத்தி, பாலியஸ்டர், பட்டு, காதி துணிகளால் ஆன தேசியக்கொடிகளையும் பயன்படுத்தலாம் என்றும் திருத்தம் செய்துள்ளது. ஆனால் இதற்கு முன்னர் காதி துணிகளால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகள் தான் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


உள்துறைச் செயலா் கடிதம்:


இதுகுறித்து, அதாவது தேசியக் கொடி கையாளுதலில் மாற்றம் செய்யப்பட்ட விதிகளை  அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு உள்துறைச் செயலா் அஜய் பல்லா கடிதம் அனுப்பியிருந்தார்.  அந்த கடிதத்தில் கொடி ஏற்றுதல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள விதிமுறை திருத்தங்களை  பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அறியும்படி செய்யுமாறு வலியுறுத்தியிருந்தார். 


இதனைத் தொடர்ந்து நாட்டு மக்கள் பரவலாக தேசியக்கொடிகளை வாங்கி, தங்களது வீடுகளில் பறக்கவிட்டனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் தேசியக் கொடியினை ஏற்றி தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். 


மத்திய அரசு நாட்டு மக்களுக்கு விடுத்த அழைப்பில் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை மட்டுமே, அதாவது மொத்தம் மூன்று நாட்களுக்கு மட்டுமே வீடுகளில் பறக்க விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் இன்னும், பலர் தங்களது வீடுகளில் கட்டப்பட்ட தேசிய கொடிகளை இன்னும் இறக்கவில்லை. இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது டூவீலரான ஸ்கூட்டரை தேசியக் கொடி கொண்டு துடைத்துக் கொண்டுள்ளார். அவரது வீட்டுக்கு எதிரில் உள்ள வீட்டு பால்ஹனியில் இருந்து ஒருவர்  எடுத்திருக்கும் வீடியோவில் ஸ்கூட்டர் பதிவு எண் டெல்லி என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.