குஜராத்தில் ஆற்றுப்பாலம் திடீரென இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
இடிந்து விழுந்த பாலம்:
குஜராத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இதுவரை 5 வாகனங்கள் பாலத்தில் விழுந்துள்ளன. 8 பேர் உயிரிழந்துள்ளனர், 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பாலம் 1985 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு தொழில்நுட்ப நிபுணர்களை அனுப்பி, விசாரணையானது நடந்து வருகிறது
பாலம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து சாலை மற்றும் கட்டிடங்கள் துறை செயலாளர் பி.ஆர். படேலியா கூறுகையில், "காம்பிரா பாலம் சேதமடைந்ததால் இந்த விபத்து நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
எச்சரிக்கை இருந்தும் பாலத்தில் போக்குவரத்து:
இந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றில் விழுந்த 5 வாகனங்களில், இரண்டு லாரிகள் முழுமையாக ஆற்றில் மூழ்கின, ஒரு டேங்கர் லாரி பாதி தொங்கிக் கொண்டிருந்தது. பாலம் இடிந்து விழுந்தவுடன், மக்கள் அலறி அடித்து ஓடினர், மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. இந்தப் பாலம் 1981 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, ஆனால் காலப்போக்கில் அதன் நிலை மிகவும் மோசமாகிவிட்டது . உள்ளூர் எம்எல்ஏ சைதன்யா சிங் ஜாலா ஏற்கனவே இந்தப் பாலம் குறித்து எச்சரித்து புதிய பாலம் கட்டக் கோரினார் இருந்த போதிலும், பாலத்தில் வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்படவில்லை. இப்போது ரூ.212 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் இதற்காக ஒரு கணக்கெடுப்பும் செய்யப்பட்டுள்ளது.
நிபுணர்கள் குழுவை விசாரணை
சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி விசாரணை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த உடனேயே, அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு, ஆற்றில் விழுந்த வாகனங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. மேலும், நீச்சல் வீரர்கள் ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
இந்த விபத்து தற்போது அங்கு பேசுப்பொருளாகியுள்ளது. வாகனங்களின் இயக்கம் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியிருந்தால், ஒருவேளை இந்த துயர சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். விசாரணை அறிக்கையின் முடிவில் தான் குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..