ராஜஸ்தானில் அரசு ஊழியரை பாஜக எம்.பி. ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சித்ரோகர் எம்.பி. சந்திர பிரகாஷ் ஜோஷி ஒரு நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், காவல் உயர் அதிகாரிகள் சூழ பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எதிரே ஐடி கார்டுடன் நிற்கும் ஒரு அரசு ஊழியரை சற்றும் எதிர்பாராத நிலையில் கன்னத்தில் அறைகிறார். அந்த நபர் நிலைகுலைந்து அதிர்ச்சி அடைகிறார்.
ஆனால் சுற்றி நிற்கும் காவலர்களோ, காவல் உயர் அதிகாரிகளோ எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக நிற்கின்றனர். இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. 7 விநாடிகளே ஓடும் இந்த வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஒரு சம்பவம்..
கர்நாடகாவில் கடந்த மாதம் நிலப்பட்டா தொடர்பாக முறையிட்ட பெண்ணை, கன்னத்தில் பாஜக அமைச்சர் சோமன்னா அறைந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கர்நாடகாவின், ஹங்காலா கிராமத்தில் அரசு சார்பில் நிலப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சோமன்னா பங்கேற்றார். அப்பொழுது அமைச்சருக்கு அருகில் வந்த பெண் ஒருவர், தனக்கு நிலப்பட்டா வழங்கவில்லை என கோபமுடன் முறையிட்டார். அதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் எதிரே நின்ற அந்த பெண்ணின் கன்னத்தில் அமைச்சர் அறைந்தார். செய்வதறியாது திகைத்த அந்த பெண் அடுத்த நொடியே, அமைச்சரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகள், அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தின. எனினும் தொடக்கத்தில் அமைச்சர் வாய் திறக்கவில்லை. பின்னர் அவரது அலுவலகம் வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில், அமைச்சரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் தோன்றி, அமைச்சர் தமக்கு உதவுவதாகக் கூறினார் என்றும் தம்மை கன்னத்தில் அறையவில்லை என்றும் குறிப்பிடுகிறார். அந்தக் காணொளியில் அவர் தம் குழந்தைகளுடன் காணப்படுகிறார். இதற்கிடையே, அந்தப் பெண்ணிடம் தாம் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் நடந்திருக்கிறது:
விருதுநகரில் கடந்த ஜூலை மாதத்தில் பொதுமக்கள் அமைச்சரிடம் தங்களது குறைகளை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் மனுக்களாக கொடுக்க வந்தனர். அப்போது மனு கொடுக்க வந்த பெண் ஒருவரை அந்த மனுவால் அவரது தலையில் அறைந்த அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் உடனடியாக அந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியதோடு சமூக வலைத்தலங்களில் தற்போது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வரிசையில் கடைசியாக ராஜஸ்தான் நிகழ்வு இணைந்துள்ளது.