பேருந்திலோ அல்லது ரயிலிலோ அல்லது விமானத்திலோ பயணம் செய்யும்போது வெளிப்புறக் காட்சியை அனுபவிக்க பெரும்பாலான பயணிகள் பொதுவாக ஜன்னல் இருக்கைகளைத் தான்  விரும்புகிறார்கள். அதிலும் விமானம், சொகுசுப் பேருந்துகளில் ஜன்னலோர இருக்கைகளை நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு முன்பதிவு செய்து கொள்ள முடியும். 


அப்படி, சமீபத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஜன்னலோர இருக்கைக்கு கூடுதல் கட்டணம் செலுத்தி ஏறிய பயணி ஒருவர் தனக்கு ஜன்னல் இல்லாத ஜன்னல் இருக்கை கிடைத்ததை அறிந்ததும் பெரும்  ஏமாற்றம் அடைந்தார்.


அனிருத் மிட்டல் என்ற பயணி, தனது ட்விட்டரில்,  ஜன்னல் இருக்கையாக இருந்தாலும் ஜன்னல் இல்லை என விமானத்தில் தான் அமர்ந்திருந்த இருக்கையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த புகைப்படத்தின் இருக்கையில் ஜன்னல்கள் இல்லை. 


மேலும், அனிருத் மிட்டல் தனது பதிவில்,  "நீங்கள் ஹீத்ரோவில் இறங்கும் போது அது அழகாக இருக்க வேண்டும் என்பதால், வலது பக்க ஜன்னல் இருக்கைக்கு கூடுதல் கட்டணம் செலுத்தினேன்."  "எங்கே என் ஜன்னல்?" என  பிரிட்டிஷ் ஏர்வேஸை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். 


இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த ட்வீட்டை பகிர்ந்ததும், இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது. பல ட்விட்டர் பயனர்கள் அனிருத் மிட்டலின் ட்வீட்டுக்கு,  பயணிகளை பல விமான நிறுவனங்கள் இப்படித்தான் ஏமாற்றுவதாக கூறியுள்ளனர். 






மற்றொருவர் அந்த பதிவுக்கு, "நீங்கள் ஒரு விண்டோஸ் பயனர் என்பது அவர்களுக்குத் தெரியாதா?" கேலியாக கமெண்ட் செய்துள்ளார். 


மற்றொருவர் இன்னும் கொஞ்சம் கீழிறங்கி, "பிரிட்டிஷ் மற்றும் அவர்களது பழைய திருட்டு பழக்கம்." என கமெண்ட் செய்துள்ளார். 


"எமிரேட்ஸிலும் இதேதான் நடந்தது, நான் என் மகனின் பயணத்திற்கு ஒரு ஜன்னல்  இருக்கையை முன்பதிவு செய்தேன். என் மகன் அவரது பயணத்திற்குப் பிறகு ஜன்னல் இல்லை என்று என்னிடம் கூறினார்," என மற்றொருவர் தனக்கு நடந்த நிகழ்வை கமெண்ட்டில் வெளிப்படுத்தினார்.


மேலும் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "எனக்கு இண்டிகோ விமானத்தில் இந்த வகையான இருக்கை கிடைத்தது. என் ஜன்னலைப் பற்றி நான் AH-யிடம் கேட்டபோது, அவர்கள் குழப்பமடைந்துவிட்டனர்." என குறிப்பிட்டு இருந்தார்.