இடைதேர்தல்:


நீண்ட இழுபறிக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக வேட்பாளர், இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால்,  திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் அதிமுக  வேட்பாளரான தென்னரசு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதோடு நாம் தமிழர், தேமுதிக மற்றும் அமமுக சார்பிலும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள சூழலில், இந்த இடைதேர்தல் முடிவுகளில் ஈரோடு மாநாகராட்சியை சேர்ந்த, கவுன்சிலர்களின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மாநகராட்சி நிலவரம்:


ஈரோடு மாநகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன, இதில் 32 வார்டுகளில் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற, 15-வது வார்டில் மட்டும் அதிமுகவை சேர்ந்த ஹேமலதா என்பவர் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து மாநகராட்சி மேயராக சு.நாகரத்தினமும், துணை மேயராக செல்வராஜும் செயல்பட்டு வருகின்றனர். எனவே, மாநகராட்சியின் செயல்பாடு, மாநகராட்சி கவுன்சிலர்களின் செயல்பாடு ஆகியவை, மற்ற கட்சிகளை காட்டிலும் திமுகவின் வெற்றி தோல்வியில் பெருமளவு எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொதுமக்கள் அதிருப்தி


ஈரோடு மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்கள் நீண்ட காலமாக வைத்து வருகின்றனர். குறிப்பாக, பாதாளச் சாக்கடைப்பணி, ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டம் மற்றும் தனியார் இணைய தள நிறுவன பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடைபெற்ற மாநகராட்சி கூட்டங்களில் பேசிய கவுன்சிலர்களும், மாநகராட்சி பகுதிகளில் ‘நடமாட முடியாத நிலை உள்ளது’ என வெளிப்படையாக கவலை தெரிவித்து இருந்தனர்.


இரவோடு இரவாக சாலைகள் சீரமைப்பு?


 வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் அமைச்சர் முத்துசாமியிடம் பொதுமக்கள் இதே கோரிக்கையை வைத்தனர். இதையடுத்து, அப்பகுதிகளில் சாலைகளை சீரமைக்க சில நூறு கோடி ரூபாய் வரையில் ஒதுக்கியுள்ளதாக கூறி வாக்காளர்களை சமாதானப்படுத்தியுள்ளார். இதனிடையே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, இரவோடு இரவாக மாநாகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே சாலைகள் சீரமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


அக்கறை காட்டாத அதிகாரிகள்


மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணி சரிவர நடக்காததோடு, குடிநீர், தெருவிளக்கு பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், உரிய பதிலலும் கிடைப்பதில்லை. அதற்கும் மேலாக கவுன்சிலர்கள் போன் செய்தால் அதிகாரிகள் எடுப்பதேயில்லை’ என்று ஆளுங்கட்சி உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து குற்றம்சாட்டியுள்ளனர். ,பூங்கா ஆக்கிரமிப்பு, ஒரு நெம்பர் லாட்டரி விவகாரங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்த சில கவுன்சிலர்கள் சிக்கியுள்ளனர். இதனால், கவுன்சிலர்களின் மீதான நம்பிக்கை வாக்காளர்களிடையே கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதேநேரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில கவுன்சிலர்களின் செயல்பாடு, ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும் உள்ளது.


மதுக்கடையை அகற்ற கோரிக்கை:


மாநகராட்சியின் 26-வது வார்டில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி ஓராண்டாக கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால்,  வாக்கு சேகரிக்கச் செல்லும் திமுகவினரை, அப்பகுதி மக்கள் மறித்து கேள்வி எழுப்பும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.


வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு:


மாநிலம் முழுவதும் மாநகராட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் வரி, குப்பைவரி மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்டவை, ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் முக்கிய பரப்புரை ஆயுதங்களாக மாற, திமுகவிற்கு பாதகமாக  மாறியுள்ளன. இவற்றை சமாளிக்கும் முயற்சியில் பல்வெறு நூதன பரப்புரைகளில் திமுகவினர் களமிறங்கியுள்ளனர். களநிலவரத்தை மாற்றி மக்களிடையே ஆதரவு திரட்டி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.