மகாராஷ்டிரா உள் விளையாட்டரங்கு ஓடுபாதையில் சரத்பவார் மற்றும் அமைச்சர்களின் கார்கள் அணிவகுத்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார்.
மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும் ஒலிம்பிக் நடைபெற்றால் இந்தியா எங்கிருக்கிறது என்றே தெரியாது. பெயர் கேள்விபடாத பல நாடுகள் பதங்கங்களை வாங்கிக் குவிக்கும். இந்தியாவில் கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளை விளையாட்டாகவே அரசு கடந்து செல்வதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவதும் உண்டு. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது மகாராஷ்டிரா சம்பவம்.
மகாராஷ்டிராவின் சிவ் சத்ரபதி உள்விளையாட்டு அரங்கில் உள்ள தடகள ஓடுபாதையில் தடகள வீரர்கள் ஓடுவதற்கு பதிலாக விலையுயர்ந்த கார்கள் ஓடியுள்ளன. ஓடுபாதையில் சரத்பவார் மற்றும் அமைச்சர்களின் கார்கள் வரிசைக்கட்டி நின்றன. அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டர் பாஜக எல்.எல்.ஏ சித்தார்த் சிரொல், சிவசத்ரபதி விளையாட்டரங்கு சரத்பவார் மற்றும் அமைச்சர்களின் கார்களின் பார்க்கிங்காக அமைந்துள்ளது. இது துரதிஷ்டவசமானது. ஆளும் கட்சியினரின் இந்த திமிரான நடவடிக்கையால் விளையாட்டு வீரர்கள் மனமுடைந்துள்ளனர். என்ற குற்றச்சாட்டு வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ள அவர், கார்கள் வழக்கமாக பார்க் செய்யும் இடத்திற்கு அருகே தான் லிப்ட் உள்ளது. ஆனால் தங்களது விஐபி கலாசாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக அராஜமாக நடந்துகொண்டுள்ளனர் என்றார்.
சிவ் சத்ரபதி உள்விளையாட்டு அரங்கில் ஜூன் 26ல் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்குபெறுவதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், அமைச்சர்கள் சிலர் வருகை தந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாஜக எம்.எல்.ஏ.வின் ட்வீட்டுக்கு பிறகு இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இணையத்தில் பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய, மாநில விளையாட்டு ஆணையாளர் ஓம் பிரகாஷ் பகோரியா, சரத்பவாருக்கு காலில் வலி இருந்தது. காரை மைதானத்துக்குள் கொண்டு வந்தால் நடந்து செல்ல கஷ்டமாக இருக்காது என நினைத்தோம். அதற்காக ஒரு வாகனம் செல்ல அனுமதி வாங்கினோம். ஆனால் எதிர்பாராத விதமாக பல வாகனங்கள் உள்ளே வந்துவிட்டன. இது துரதிர்ஷ்டவசமானது. இதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். இந்த சம்பவம் மீண்டும் நடக்காது என்பது உறுதி என்றார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இது மிகவும் சோகமாக சம்பவம் எனத் தெரிவித்தார்.
Child Labour : 9000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்ட அவெஞ்சர் வுமன் அனுபமாவின் கதை!