Cuttack Clash: ஒடிசா மாநிலம் கட்டக்கில் வெடித்த வன்முறையை தொடர்ந்து, அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டு, 36 மணி நேரத்திற்கு ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
36 மணி நேர ஊரடங்கு உத்தரவு:
ஒடிசா மாநிலம் கட்டக்கில் நவராத்திரியை ஒட்டி துர்கா சிலை கரைப்புக்கான ஊர்வலம் அண்மையில் நடந்தது. அப்போது இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதன் நீட்சியாக ஞாயிற்றுக்கிழமை மாலையில் புதிய வன்முறை வெடித்தது. இதில் காவல்துறையினர் உட்பட 25 பேர் காயமடைந்தனர். இதையடுத்து கட்டக்கில் 13 காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில், இணையசேவை துண்டிக்கப்பட்டு 36 மணி நேர ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டதாக குற்றம்சாட்டி, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் இன்று 12 மணி நேர முழு கடையப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மத ஊர்வலத்தின்போது வெடித்த வன்முறை
கட்டாக்கின் தரகாபஜார் பகுதியில் உள்ள ஹாத்தி போகாரி அருகே அதிகாலை 1.30 மணி முதல் 2 மணி வரை வன்முறை வெடித்தது. கதாஜோடி ஆற்றின் கரையில் உள்ள டெபிகாராவை நோக்கி ஒரு குழு ஊர்வலமாக வந்து கொண்டிருந்தது. ஊர்வலத்தின் போது அதிகப்படியான ஒலியுடன் இசை இசைக்கப்படுவதை உள்ளூர்வாசிகள் சிலர் எதிர்த்ததைத் தொடர்ந்து பிரச்னை தொடங்கியதாக கூறப்படுகிறது. புகார் தெரிவித்த நபர்களை நோக்கி, ஊர்வலத்தில் இருந்தவர்கள் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசத் தொடங்கியதால் வாக்குவாதங்கள் மோதலாக உருவெடுத்துள்ளது.
இதனால் பல வாகனங்கள் மற்றும் சாலையோரக் கடைகள் சேதமடைந்ததால், கூட்டத்தைக் கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதையடுத்து சிலை கரைப்பு நடவடிக்கை கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டு, கடுமையான பாதுகாப்பின் கீழ் மீண்டும் தொடங்கியது.
மத ஊர்வலத்தின்போது வெடித்த கலவரம்
இந்த சூழலில் தான், கட்டக்கில் உள்ள ஒரு அமைப்பு பைக் பேரணி மேற்கொள்ள அனுமதி கோரியுள்ளது. இதனால் மதரீதியான மோதல் ஏற்படக்கூடும் என காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதையும் மீறி மாலையில் பேரணியில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்றதால் மீண்டு கலவரம் வெடித்துள்ளது. போலீசார் மீது கற்களை வீசிய அந்த கும்பல், ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகள் போன்றவற்றை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். உடனடியாக விரைந்த போலீசார் பெரிய அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே தீயை அணைத்துள்ளனர். மேலும், வன்முறையாளர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு
இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக தர்கா பஜார், மங்களாபாக், கண்டோன்மென்ட், பூரிகாட், லால்பாக், பிடானாசி, மர்கட் நகர், சிடிஏ கட்டம்-2, மல்கோடம், பதம்பாடி, ஜகத்பூர், பயலிஸ் மௌசா மற்றும் சதர் ஆகிய காவல் நிலையப் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி தொடங்கி, 36 மணி நேரம் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 7 மணி வரை கட்டாக் நகரம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் பிற தளங்கள் உட்பட அனைத்து இணைய மற்றும் தரவு சேவைகளையும் மாவ்ட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:
இந்த மோதல்கள் குறித்து பேசிய பிஜு ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் சுலதா தியோ, “கட்டக் என்பது சகோதரத்துவத்தின் நகரம், அங்கு இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் எப்போதும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை கையாளவோ அல்லது பெண்களைப் பாதுகாக்கவோ முடியாது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, குற்ற விகிதம் அதிகரித்துள்ளது" என குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, இந்த மோதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மோதல்களுக்கு காரணமானவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மோகன் சரண் மஜ்ஹி தெரிவித்துள்ளார்.