நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.


நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தில் பல கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை தெரிந்து கொள்வதற்காக ChaSTE கருவியும் தரையிறங்கும் இடத்தை சுற்றி நில அதிர்வு தொடர்பாக ஆராய்வதற்காக ILSA கருவியும் மின் திறன் கொண்ட துகள்களை பற்றி ஆராய LP கருவியும் விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்டுள்ளன.


சந்திரயான் 3 ரோவரால் அசந்து போன உலக நாடுகள்:


அனுப்பப்பட்ட கருவிகளின் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ, நிலவின் வெப்பநிலை தொடர்பான ஆய்வின் தகவல்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.


இந்த நிலையில், சந்திரயான் 3 விக்ரம் லேண்டருக்கு கொடுக்கப்பட்ட பணியை காட்டிலும் அதிக அளவில் சாதித்து காட்டியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதுமட்டும் இன்றி, விக்ரம் லேண்டர் மீண்டும் மேலே செலுத்தப்பட்டு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாஸ் காட்டும் இஸ்ரோ:


இதுகுறித்து எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில் இஸ்ரோ வெளியிட்ட பதிவில், "விக்ரம் லேண்டர் மீண்டும் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட பணியை காட்டிலும் விக்ரம் லேண்டர் அதிக அளவில் சாதித்து காட்டியுள்ளது. மேலே எழுப்பப்படும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.


கமாண்ட் கொடுக்கப்பட்டதன் மூலம், நிலவில் தரையிறங்கிய பகுதியில் இருந்து 40 செ. மீட்டருக்கு மேலே செலுத்தப்பட்டு 30 முதல் 40 செ.மீ தொலைவில் லேண்டர் மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், எதிர்காலத்தில் அனுப்பப்பட்ட லேண்டரை மீண்டும் பூமிக்கு எடுத்து வரும் திட்டத்தையும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் ஊக்கப்படுத்தியுள்ளது.


 






அனைத்து கருவிகளும் சரியாக இயங்கி வருகிறது. நல்ல நிலையில் உள்ளது. இந்த சோதனைக்கு பிறகு, Ramp, ChaSTE, ILSA போன்ற கருவிகள் தரையிறக்கப்பட்டு, மீண்டும் உள்ளே எடுத்து கொள்ளப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.