JEE Main 2025 NTA: ஜே.இ.இ., தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுவதாக, தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஜே.இ.இ., தேர்வு முறையில் மாற்றம்:

JEE எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முதன்மை தேர்வில்,  பிரிவு B-யில் கேள்விகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. முந்தைய ஆண்டுகளில், தேர்வர்கள் பிரிவு B-ல் கேட்கப்படும் பத்தில் ஏதேனும் ஐந்து கேள்விகளை தேர்வு செய்து பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2025 முதல், அந்த வாய்ப்பு இனி கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் JEE முதன்மை தாள் 1 (BE/BTech), தாள் 2A (BArch) மற்றும் தாள் 2B (BPlanning) ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

தளர்வுகளை திரும்பப் பெற்ற தேசிய தேர்வு முகமை:

கொரோனா தொற்று நோய் பரவிய காலகட்டத்தில், ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கான தற்காலிக தீர்வாகவே பத்தில் 5 கேள்விகளை தேர்வு செய்து பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நடைமுறை 2020 முதல் 2024 வரை நடைமுறையில் இருந்தது. மே 2023 இல் உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா இனி உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக இருக்காது என்று அறிவித்ததைத் தொடர்ந்து, தளர்வுகளை நிறுத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. அதன்படி, தேர்வு அதன் முந்தைய முறைக்கே திரும்பும், அங்கு பிரிவு B ஒவ்வொரு பாடத்திற்கும் ஐந்து கட்டாயக் கேள்விகளைக் கொண்டிருக்கும். அதில் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல்  அனைத்து கேள்விகளுக்கும் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும்.

Continues below advertisement

விரைவில் ஆன்லைன் பதிவு:

JEE Main 2025க்கான ஆன்லைன் பதிவு செயல்முறை விரைவில் தொடங்கும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.inஐ, சமீபத்திய தகவல்களுக்கும், பதிவு மற்றும் தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான ஆதாரங்களை அணுகவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜே.இ.இ., தேர்வு

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி ஆகியவற்றில் இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கை, தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஜே.இ.இ. தேர்வானது, முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இந்த நிலையில் தான், ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் வழங்கப்பட்டு வந்த தளர்வுகளை திரும்பப் பெறுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.