ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, அம்மாநில அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புது கட்சி தொடங்கினார். 


இதனால், இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் பலவீனம் அடைந்தது. ஆந்திரா பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறி கொடுக்க, தெலுங்கு தேசம் கட்சி அங்கு ஆட்சியை பிடித்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், தெலுங்கு தேச கட்சியை தோற்கடித்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. 


சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் அதிரடி காட்டும் விஜயசாந்தி:


தெலங்கானாவை பொறுத்தவரை, கடந்த 9 ஆண்டுகளாக கே. சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆதிக்கம்தான் தொடர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தெலங்கானாவில் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தெலங்கானாவில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.


ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த பலர், காங்கிரஸ் கட்சியில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர்.


இந்த நிலையில், சினிமாவில் அதிரடி நாயகியாக வலம் வந்த விஜயசாந்தி, காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகிய நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.


அரசியல் வாழ்க்கை:


கடந்த 1998ஆம் ஆண்டு, பாஜகவில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் விஜயசாந்தி. மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வந்தார். பின்னர், தெலங்கானா தனி மாநில போராட்டம் உச்சம் அடைந்த சமயத்தில், தனது சொந்த கட்சியை தொடங்கினார். பின்னர், அதை டி.ஆர்.எஸ் (பி.ஆர்.எஸ்) உடன் இணைத்தார்.


கடந்த 2009ஆம் ஆண்டு, டிஆர்எஸ் வேட்பாளராக மேடக் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2014இல், டிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்து, மேடக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 


2018 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸின் நட்சத்திரப் பிரச்சாரகராக இருந்தார். காங்கிரஸின் தோல்விக்கு பிறகு, கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.