கேரளாவில் அமைந்துள்ளது கோழிக்கோடு மாவட்டம். கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ளது காக்கூர் பகுதி. காக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எரவன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சுப்ரினா என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஷாஜி. இவர் பூலூர் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.


வாக்குவாதம்:


வழக்கமாக சுப்ரினாவை அவரது கணவர் பள்ளி முடிந்ததும் நேரில் வந்து அழைத்துச் செல்வது வழக்கம் ஆகும். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுப்ரினா வேலை பார்க்கும் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஆசிரியை சுப்ரினா அவரது வகுப்பில் மாணவர் ஒருவரை அறைந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, சுப்ரினா மற்றொரு ஆசிரியர் மீதும் மாணவர்களை அடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தால் ஆசிரியர் கூட்டத்தில் சுப்ரினாவுக்கும் மற்றொரு ஆசிரியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.






அப்போது, வழக்கம்போல தன்னுடைய மனைவியை அழைத்துச் செல்வதற்காக சுப்ரினாவின் கணவர் ஷாஜி, சுப்ரினா பயிலும் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, சுப்ரினா தனது கணவரை அழைத்துள்ளார். அவர் பள்ளிக்குள் ஆசிரியர்கள் கூட்டம் நடக்கும் அறைக்கு வந்துள்ளார். அப்போது, தனது மனைவிக்காக ஷாஜி, அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


வகுப்பறையிலே அடித்துக்கொண்ட ஆசிரியர்கள்:


வாக்குவாதம் முற்றியதால் சுப்ரினாவின் கணவர் அந்த பள்ளி ஆசிரியர்களைத் தாக்கத் தொடங்கினார். இதனால், அந்த பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர் சரமாரியாக அந்த பள்ளி ஆசிரியர்களை தாக்க அவர்கள் இவரைத் தடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது, அந்த பள்ளியில் சுப்ரினா குற்றம் சாட்டிய ஆசிரியருக்கும் இவருக்கும் மோதல் வலுத்துள்ளது. இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்ற ஆசிரியர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளிக்குள்ளே வகுப்பறையில் ஆசிரியர்களுக்குள் நடந்த இந்த சண்டையில் 7 பேர் காயமடைந்துள்ளனர். பள்ளி ஆசிரியர்களான உமர், வீணா, முகமது ஆசிப், அனுபமா மற்றும் ஜஸ்லா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களை தாக்கிய ஆசிரியரான ஷாஜி ஒரு ஆசிரியர் சங்கம் ஒன்றின் தலைவராகவும், அவரது மனைவி சுப்ரினா அதன் பொருளாளராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவத்திற்கு மற்ற ஆசிரியர்களும், பெற்றோர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க: Crime: பெண் மருத்துவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்! வீடியோ எடுத்து மிரட்டல்!


மேலும் படிக்க: INDIAN NAVY: கடற்கொள்ளைக்கு செக்! இந்திய கடற்படையின் மூவ்! கினியா வளைகுடாவில் ஐஎன்எஸ் சுமேதா ரோந்து வெற்றி