பீகார் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் நேற்று கிட்டத்தட்ட மரணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பெண் ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலை பிடிக்க சென்ற பெண், நிலைதடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே மாட்டி கொண்டார். 


அப்போது, சமயோஜிதமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அந்த பெண்ணை காப்பாற்றியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ரயிலின் கீழே மாட்டி கொண்ட அம்பிஷா கட்டூன் என்ற பெண், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த பெண் தனது ரயிலுக்காக பிளாட்ஃபார்ம் எண் 3 இல் காத்து கொண்டிருந்தார். அவர் கழிவறைக்குச் செல்ல வேண்டி இருந்தது.


 






ஆனால், அந்த மேடையில் கழிப்பறை இல்லை. இதற்கிடையில், குவாலியர்-பராயுனி எக்ஸ்பிரஸ் வந்ததால், ரயிலில் உள்ள கழிவறைகளில் ஒன்றைப் பயன்படுத்த முடிவு செய்து அதில் ஏறி இருக்கிறார். ரயில் நிலையத்தில், அந்த ரயில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் என அவர் எண்ணி இருக்கிறார்.


இச்சூழலில், அவர் ஏறிய சில நிமிடங்களில், ரயில் நிலையத்தை விட்டு ரயில் செல்ல தொடங்கியது. அவர் அவசரமாக இறங்க முயன்றபோது, ​​அவர் வழுக்கி விழுந்து, ஓடும் ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்டார்.


அவர் ஆபாயத்தில் சிக்கி இருந்ததை பார்த்து, மேடையில் இருந்தவர்கள் அலாரத்தை எழுப்பினர். ஆனால், யாரும் அவருக்கு உதவி செய்ய செல்லவில்லை. அதிர்ஷ்டவசமாக அப்போது அவர் அருகே, ரயில்வே பாதுகாப்பு படை வீரர் நின்று கொண்டிருந்தார். துரிதமாக செயல்பட்ட அவர் விரைந்து சென்று அந்த பெண்ணை மரணத்தின் தருணத்தில் இருந்து காப்பாற்றினார். பெண்ணை காப்பாற்றிய அந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


சமீபத்தில், மும்பையில் ரயிலிலிருந்து தவறி விழுந்த பெண்ணை, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. மும்பையின் கன்ஜூமார்க் ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு புறப்பட்ட புறநகர் ரயிலில் கடைசி நேரத்தில் ஏற பெண் ஒருவர் முயற்சித்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த பெண்ணால் உள்ளே செல்ல முடியவில்லை. 


ரயிலின் உள்ளே செல்ல முடியாமல் திரும்பியபோது, அந்தப் பெண்ணின் ஆடை ரயிலில் சிக்கியது. புறப்பட்ட ரயிலின் வேகத்தால் உடனே அவர் ரயிலுக்கு அடியில் சிக்கினார். அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இதைக் கண்டவுடன், சட்டென விரைந்து அந்தப் பெண்ணை இழுத்து காப்பாற்றினார்.


இதனால் அந்த பெண் உயிர்பிழைத்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது அந்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.