பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்து கோவாவின் கடை உரிமையாளர் ஒருவர் பேசிய வீடியோ அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை அடுத்து தான் ஆதரவு தெரிவித்ததற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல் அவர் ‘பாரத் மாதா கி ஜெய்’ என உரக்க கோஷமிடுவதும் பதிவாகி உள்ளது. ஒரு குழு அவரை இவ்வாறு கோஷமிடச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
வடக்கு கோவாவில் உள்ள கலங்குட் பகுதியில் இருக்கும் அந்தக் கடையின் உரிமையாளர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரித்து ஒரு வீடியோ ஒன்றில் பேசி இருந்தார். வீடியோ எடுக்கப்பட்டபோது அண்டை நாடான பாகிஸ்தான் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. அந்த வீடியோவில் வீடியோ பதிவு செய்பவர் கடை உரிமையாளரிடம், “யார் விளையாடுகிறார்கள்? நீங்கள் நியூசிலாந்துக்காக சீயர்ஸ் செய்கிறீர்களா?" எனக் கேட்கிறார். அதற்கு அந்த நபர், "பாகிஸ்தானுக்கு" என்று பதிலளித்தார். பதிவு செய்பவர் அவரிடம் ஏன் என்று கேட்கிறார், அதற்கு அந்த நபர், "இது இஸ்லாமியப் பகுதி" என்று பதிலளித்தார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, கடந்த வியாழன் அன்று ஒரு குழுவினர் கடை உரிமையாளரை அணுகி பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதோடு மட்டுமல்லாமல் அந்தக் குழு கடை உரிமையாளரை மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்திய வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
முழு வீடியோவைப் பார்க்க:
அந்தக் குழுவின் உறுப்பினர் அந்த நபரிடம், “இந்த முழு பகுதியும் கலங்குட்தான். மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரிக்காதீர்கள்” என அறிவுறுத்துகிறார்.
அதோடு மட்டுமல்லாமல், அவர் மண்டியிட்டு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பணிக்கிறார்.தொடக்கத்தில் தயங்கினாலும் பிறகு, கடை உரிமையாளர் மண்டியிட்டு காதுகளைப் பிடித்து மன்னிப்பு கேட்பதை வீடியோவில் காணலாம். அந்த குழு அவரை ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை எழுப்ப சொல்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக எவ்வித புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.