அகமதாபாத்தில் மகர சங்கராந்தி கொண்டாட்டங்களின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டத்தை பறக்க விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் அகமதாபாத்தில் மகர சங்கராந்தியை கொண்டாடினர். அப்போது ஒரு வீட்டின் மேல் மாடியில் இருந்து அமித்ஷா பட்டத்தை பறக்க விட்டார். அவருடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் இருந்தார்.
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் மகர சங்கராந்தி அன்று பட்டம் விடுவது ஒரு போற்றப்படும் பாரம்பரியமாக உள்ளது.
இதுகுறித்து பூபேந்திர படேல் தனது எக்ஸ் தளத்தில், கொண்டாட்டங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். முன்னதாக அமித்ஷா மக்களுக்கு சங்கராந்தி வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதில், “மகர சங்கராந்தி என்பது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின் பண்டிகை. ஆற்றல், உற்சாகம் மற்றும் முன்னேற்றத்தின் இந்த புனித பண்டிகையில் நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
மகர சங்கராந்தி அன்று, பக்தர்கள் சூரிய பகவானுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம். தமிழ்நாட்டில் பொங்கல் மற்றும் அசாமில் பிஹு உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் இந்த பண்டிகை இந்தியா முழுவதும் அழைக்கப்படுகிறது. குஜராத்தில் இது உத்தராயண் என்று கொண்டாடப்படுகிறது.