Manika Vishwakarma: தாய்லாந்தில் வரும் நவம்பர் மாதம் 74வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற உள்ளது.
பிரபஞ்ச அழகி போட்டி:
பிரபஞ்ச அழகி போட்டிக்கான இந்தியாவின் போட்டியாளரை தேர்வு செய்வதற்கான, மிஸ் யுனிவெர்ஸ் இந்தியா போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நேற்று நடைபெற்றது. ஏராளமான போட்டியாளர்கள் கண்களை கவரும் விதமான ஆடைகளை அணிந்து, ஒய்யார நடைபோட்டு நடுவர்களின் கவனத்தை ஈர்த்தனர். இறுதியில் ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஷ்வகர்மா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தன்யா சர்மா, ஹரியானாவைச் சேர்ந்த மேஹக் திங்க்ரா ஆகியோர் அடுத்தடுத்து இடங்களை பிடித்தனர். இதையடுத்து நடப்பாண்டு இறுதியில் வரும் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள 74வது மிஸ் யுனிவெர்ஸ் போட்டியில், இந்தியா சார்பில் மணிகா போட்டியிட உள்ளார்.
மணிகா சொன்னது என்ன?
வெற்றி குறித்து பேசுகையில், “எனது சொந்த ஊரான கங்காநகரில் இருந்து எனது பயணம் தொடங்கியது. நான் டெல்லிக்கு வந்து போட்டிக்குத் தயாரானேன். நமக்குள் நம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அனைவரும் பெரும் பங்கு வகித்தனர். எனக்கு உதவி செய்து இன்று நான் இருக்கும் நிலைக்கு என்னை மாற்றிய அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். போட்டி என்பது வெறும் ஒரு துறை மட்டுமல்ல, அது ஒரு நபரின் குணத்தை உருவாக்கும் அதன் சொந்த உலகம்” என மணிகா விஷ்வகர்மா தெரிவித்துள்ளார்.
யார் இந்த மணிகா விஷ்வகர்மா?
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்த மணிகா, தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். 22 வயதான இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவெர்ஸ் ராஜஸ்தான் போட்டியிலும் அவர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. பல துறைகளில் கவனம் செலுத்தும் நபரான மணிகா தற்போது, தனது பொலிடிகல் சயின்ஸ் மற்றும் பொருளாதார பட்டப்படிப்பின் மூன்றாமாண்டில் கவனம் செலுத்தி வருகிறார். இதுபோக தனது இளம்பருவத்திலேயே பல பிரிவுகளில் தன்னை நிரூபித்துள்ளார்.
அதன்படி, பரதநாட்டிய பயிற்சி, ஓவியம் ஆகிய கலைகளில் கைதேர்ந்தவராக திகழ்கிறார். வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட BIMSTEC Sewocon நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் மற்றும் லலித் கலா அகாடெமி ஆகிய விருதுகளையும் மணிகா பெற்றுள்ளார்.
சமூகப்பணியில் மணிகா..
தனது கலை மற்றும் கல்வி சார்ந்த பணிகளுக்கு அப்பால், மணிகாவுக்கு தேவையானோருக்கு ஆலோசனைகளை வழங்குவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அவர் நியூரோனோவாவின் நிறுவனர் ஆவார். இது நரம்பியல் வேறுபாடு தொடர்பான உரையாடல்களை மறுவடிவமைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமாகும். இந்த முயற்சியின் மூலம், ADHD போன்ற நிலைமைகளை கோளாறுகளாக அல்ல, மாறாக தனித்துவமான அறிவாற்றல் பலங்களாகப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை மணிகா வலியுறுத்துகிறார். தேசிய அளவில் வெற்றியை வசப்படுத்திய மணிகா, பிரபஞ்ச அழகி போட்டியிலும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.