கேரளாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பள்ளிகளை ஒழித்துவிட்டு அப்பள்ளிகள் அனைத்தையும் கலப்பு பள்ளிகளாக மாற்ற கேரள கல்வித்துறைக்கு குழந்தைகள் உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரள மாநிலத்தில் மொத்தம் 280 பெண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளும் 124 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் கலப்பு பள்ளிகளாக மாற்ற தற்போது குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


சமூகத்தின் சிறிய மாடல் 'பள்ளிக்கூடம்' !




பள்ளிக்கூடம் என்பது ஒரு சமூகத்தின் சிறிய மாடல்… ஒரு குழந்தையை நாளை இந்த சமுதாயத்தில் வாழப்போகும் ஒரு குடிமகனாக மாற்றும் இடம் பள்ளிக்கூடம். இந்த சமூகத்தில் சகமனிதர்களுடன் நாம் எப்படி வாழ்வது, வாழ்வின் நடக்கும் பல்வேறு விஷயங்களை எவ்வாறு அணுகுவது என்பதை கற்றுக் கொடுக்கும் இடம் பள்ளிக்கூடம். இந்நிலையில் தொடக்க பள்ளியிலிருந்தே ஆண்கள், பெண்களுக்கு எனத் தனித்தனி பள்ளிகள் நம் ஊரில் இருக்கின்றன. பெற்றோர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குழந்தைகளை அந்த பள்ளிகளில் சேர்க்கின்றனர். வேறுபாலினத்தவரிடம் இருந்து தங்கள் குழந்தையை பாதுகாப்பதாக நினைத்து, இந்த முடிவை பெற்றோர்கள் எடுக்கின்றனர்.


ஆண்கள் பெண்களுக்கான தனி தனி பள்ளிகள் இருப்பது ஒரு தவறான நடைமுறையே!  ஆண் பெண் இருவரும் கலந்து வாழ வேண்டிய நிலை நம் சமூகத்தில் உள்ளது. அப்படி இருக்கையில் ஏன் பள்ளிகளில் பாலின வாரியாக பிரித்து கல்வி அளிக்க வேண்டும். இவ்வாறு ஆண் பெண் பிள்ளைகளை தனித்தனியாக வளர விடுவதால், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை எப்படி அணுக வேண்டும் என்ற வரைமுறை தெரியாது. அதுவே பெண்கள் மட்டும் பயிலும் பள்ளியில் இருந்து வரும் பெண்ணுக்கு ஆண்களை கண்டாலே பயம், தயக்கம் போன்ற எதிர்மறையான எண்ணங்களே தோன்றும். பள்ளிப் படிப்பை முடித்து வந்த பிறகு, இந்த மாணவர்கள் கல்லூரியில் சக மாணவ மாணவிகளுடன் பழக மிகவும் சிரமப்படுகிறார்கள். இதைவிட கொடுமை என்னவென்றால் கல்லூரிகளிலும் ஆண்கள் பெண்களுக்கென தனித்தனி கல்லூரிகள் இருக்கின்றன. இந்நிலையில் கேரளாவில் எடுக்கப்பட்ட இந்த முன்னெடுப்பு பிற மாநிலங்களுக்கு நல்ல உதாரணமாக அமையும் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்துவது கேரளாவுக்கு புதிதல்ல.


ஜெண்டர் பாசிட்டிவ் கேரளா :




சில மாதங்களுக்கு முன்,  கேரள பள்ளிகளில் ஆசிரியர்களை சார் மேடம் என அழைக்க வேண்டாம்; டீச்சர் என்று அழைத்தாலே போதும்! என்ற உத்தரவை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையின் மூலம் ஆண் பெண் வேறுபாடை ஒழிக்க முற்படுவதாக அச்சமயத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல பள்ளிகளில் ஜெண்டர் நியூட்ரல் யூனிஃபார்ம்களையும் அறிமுகப்படுத்தி பாலின சமத்துவத்தையும் ஊக்குவித்தது கேரளா. இவ்வாறு தொடர்ந்து ஆண் பெண் வேறுபாட்டை அகற்றி பாலின சமத்துவத்தை ஊக்குவித்து  வருகிறது கேரளா மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.