ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டம் நாடு முழுவதும் பெரிய பிரச்சினையை கிளப்பியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை எதிர்த்தும், அதனை தடை செய்யவும் சட்டம் இயற்றியது. 


இதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, அக்டோபர் 1ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு. அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்தார். 


ஆனால், அவசர சட்டம் கொண்டு வரப்பட்ட பின் கூடும் சட்டசபை நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகிவிடும். அதன்படி ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் காலாவதியானது. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் நிரந்தர சட்டத்திற்கு அதாவது சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.


மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை  ஏன் தடை செய்ய வேண்டும், இந்த சட்டத்தை ஏன் அமல் படுத்த வேண்டும் என விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர். அதற்கு தமிழ்நாடு அரசு கடிதம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளது.


இப்படி, இந்த விவகாரம் தொடர் பிரச்சினையாக இருந்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தினால் தினம் ஒரு தற்கொலை நிகழ்ந்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு மாநில அரசுகள் தொடர் நடவடிக்கையை எடுத்து வருகிறது.


இந்நிலையில், இந்த விவகாரத்தை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இன்று எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை ஒழுங்கப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்" என உறுதி அளித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர், "இது தொடர்பாக 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தானாக சட்டம் இயற்றியுள்ளது. 17 மாநிலங்கள் பொது சூதாட்ட சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான பிரிவுகளை அதில் அறிமுகம் செய்துள்ளது. 


ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நம்மிடையே ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். மத்தியில் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்" என்றார்.


சமீபத்தில், மதுரை அருகே சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.


 






தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு 42 தற்கொலை நடந்துள்ளது. தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.