பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை சுதந்திர போராட்டத்தில் எந்த வித பங்கினையும் ஆற்றவில்லை என காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்திருந்தார். 


ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு நடுவே பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களின் உயிரையே தியாகம் செய்துள்ளனர். உங்கள் வீட்டில் உள்ள நாயாவது இந்த நாட்டுக்காக இறந்திருக்கிறதா? 



இன்னும், அவர்கள் (பாஜக) தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் நாங்கள் தேச விரோதிகள் என்று அழைக்கப்படுகிறோம்"


கார்கேவின் இந்த கருத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி பாஜக அமளியில் ஈடுபட்டது. பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவரின் பேச்சை உறுப்பினர்கள் கேட்காமல் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார். கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத காரணத்தால் கோபமடைந்த ஜகதீப் தன்கர், "நாம் ஒன்றும் குழந்தைகள் அல்ல" என உறுப்பினர்களை கடிந்து கொண்டார். 


உறுப்பினர்களின் கூச்சலுக்கு மத்தியில் தொடர்ந்து பேசிய அவர், "இந்த மாதிரியான நடத்தை நமக்கு மிக மிக மோசமான பெயரைத் தருகிறது. நாங்கள் மிக மோசமான முன்னுதாரணமாக இருக்கிறோம். வெளியில் இருப்பவர்கள் (மக்கள்) ஏமாற்றமடைந்துள்ளனர்.


மாநிலங்களவை தலைவரின் நல்ல கருத்துகள் கூட ஜீரணிக்க முடியாதவையாக உள்ளது. என்ன ஒரு வேதனையான சூழ்நிலையை நாம் அனுபவித்து வருகிறோம். என்னை நம்புங்கள், 135 கோடி மக்கள் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள். அவர்கள் சிந்திப்பார்கள். யோசிப்பார்கள். நாம் எந்த நிலைக்கு விழுந்துவிட்டோம். சபைக்கு வெளியே ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கலாம். அத்தகைய கூற்றுக்கு அடிப்படை ஆதாரங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். சொல்லப்பட்டதில் இரு வேறு கருத்துக்கள் கூட இருக்கலாம். 


ஆனால், அதற்கு அவைத் தலைவர் பேசும்போது, ​​எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையூறு செய்யலாம் என அர்த்தம் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது, ​ஆளும் தரப்பினர் இடையூறு செய்யலாம். இது என்ன பழிவாங்கல் நடவடிக்கையா? எனது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதில், நான் இந்தப் பக்கமோ, இந்தப் பக்கமோ பார்க்க மாட்டேன்; அரசியலமைப்பை மட்டுமே பார்ப்பேன்" என்றார்.


பாஜகவினரை கிண்டல் செய்யும் விதமாக பேசிய கார்கே, "நான் இங்கே மீண்டும் சொன்னால், இந்த மக்களுக்கு (பாஜக) அது மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால், சுதந்திர போராட்டத்தின் போது மன்னிப்பு கேட்டவர்கள் சுதந்திரத்திற்காக போராடியவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். 


காங்கிரஸ் இந்தியாவைப் பிரிக்க யாத்திரை நடத்துகிறது என்றார்கள். அப்போதுதான் நான் சொன்னேன், காங்கிரஸ் எப்போதும் இந்தியாவை ஒன்றிணைக்கும் வேலையை செய்கிறது.


இதற்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்கள் உயிரைக் கொடுத்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தது யார் தெரியுமா?" என்றார்.