பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்.  88 வயதான அவர், வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், மைசூருவில் உயிரிழந்தார். இதையடுத்து, திரை உலகினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Continues below advertisement

சிஸ்ட்லா ஜானகி, 1938-ம் ஆண்டு, ஏப்ரல் 23-ம் தேதி ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற கிராமத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்ட இவர், நாதஸ்வர மேதை பைடிசாமியிடம் முறையாக இசை பயின்றவர்.

பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்த ஜானகி, 1957-ல் விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில், ‘பெண் என் ஆசை பாழானது ஏனோ‘ என்ற பாடலை பாடியதன் மூலம், திரையுலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து, தெலுங்கு படம் ஒன்றில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில், 48,000-த்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

Continues below advertisement

நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள எஸ். ஜானகி, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளிடமிருந்து 33-க்கும் மேற்பட்ட மாநில விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2013-ல் இந்தியாவின் உயரிய விருதான ‘பத்ம பூஷன்‘ விருது இவருக்கு அறிவிக்கப்பட்டபோது, தனக்கு அது தாமதமாக கிடைப்பதாகக் கூறி, அதை ஏற்க மறுத்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், மராத்தி, உருது, குஜராத்தி, பஞ்சாபி, கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், அசாமி, சிந்தி, இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும்  ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் ஜானகி. அதிக எண்ணிக்கையிலான பாடல்களை கன்னடத்தில் பாடியுள்ள அவர், இசை வாழ்க்கையில் 6 தலைமுறைகளை கண்டவர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார் ஜானகி. அது மட்டுமல்லாமல், முதல் முறையாக, ‘மௌனப் போராட்டம்‘ என்ற தெலுங்கு திரைப்படத்திற்கு அவர் இசையமைத்திருக்கிறார்.

‘தென்னிந்தியாவின் இசையரசி‘ என்று பெயர்பெற்று, தவிர்க்க முடியாத பாடகியாக விளங்கிய எஸ். ஜானகி, 1992-ல் இலங்கை சென்றிருந்தபோது, அவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. இது இல்லாமல், மைசூரு பல்கலைக்கழகத்திடமிருந்து முனைவர் பட்டமும், தமிழ்நாடு அரசிடம் இருந்து ‘கலைமாமணி‘ விருதும், கர்நாடக அரசிடமிருந்து ‘கர்நாடக ராஜயுத்சவா‘ விருதும் பெற்றுள்ளார் ஜானகி.

ஒரு காலகட்டத்தில், இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஜானகி கூட்டணி மிகவும் பேசப்பட்ட கூட்டணியாக அமைந்திருந்தது. 1960 - 1980 காலகட்டங்களில், பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே. யேசுதாஸ், பி. ஜெயச்சந்திரன், ராஜ்குமார் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையிலான திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார் ஜானகி.

கடந்த 2016-ம் ஆண்டு திரையுலகில் இருந்தும், மேடைக் கச்சேரிகளில் பாடுவதில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து, தனது சொந்த ஊருக்கு திரும்பினார். ஆனாலும், கடந்த 2018-ம் ஆண்டு, பிண்ணாடி என்ற தமிழ் திரைப்படத்தில் பாடியுள்ளார்.