மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதாவுக்கு கோயில் கட்டுவோம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. 


 நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் என தகவல்கள் கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாக 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட கள ஆய்வுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. 


அதன்படி, மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7 ஆம் தேதியும், சட்டீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு முன்னதாக தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அதற்கான நடைமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. இம்மாநிலங்களில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், சிறிய கட்சிகள் என எந்த பாகுபாடுமின்றி தீவிரமாக களப்பணியாற்றி தாங்கள் யார் என்பதை நிரூபிக்க தயாராக உள்ளனர். 


காரணம், வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் எண்ணங்களை இந்த தேர்தல் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பதால் ஒட்டுமொத்த இந்தியாவும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதில் 231 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆனால் வரும் தேர்தலில் எப்படியாவது வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதில் 229 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை இரண்டு கட்டங்களாக அக்கட்சி அறிவித்துள்ளது. 


மத்திய பிரதேசத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்நாத் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தசரா பண்டிகை வாழ்த்துகளோடு தனது தேர்தல் பரப்புரையையும் தொடங்கியுள்ளார். கமல்நாத் தனது பதிவில், ”காங்கிரஸ் ஆட்சியில் உத்தரப்பிரதேச மக்களின் நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தை உயர்த்த எந்த எல்லைக்கும் செல்வோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டும் திட்டம் தொடங்கப்படும். மேலும் அர்ச்சகர்களின் உதவி தொகை உயர்வு, கோயில் நிலங்கள் மீட்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Actor Vinayakan: ஜெயிலர் பட வில்லனை தட்டித்தூக்கிய காவல் துறை.. குடி போதையில் இப்படி பண்ணிட்டாரே!