முதல்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் அடுத்தாண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கடந்த 1950 மற்றும் 60 களில் வடிவமைக்கப்பட்ட ரயிலுக்கு மாற்றாக வந்தே மெட்ரோ என பெயரிடப்பட்ட இந்த ரயில் பயன்பாட்டிற்கு வருகிறது.


இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், "உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயில் 2023 டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்திற்குள் வடிவமைப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.


நடுத்தர வர்க்கம், ஏழை மக்களின் தேவையை இந்த ரயில் பூர்த்தி செய்யும். அவர்களை மனதில் வைத்தே இந்த ரயில் உருவாக்கப்பட்டது. வந்தே மெட்ரோ ரயில்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட உள்ளது. தற்போது, ​​இந்தியாவில் பெரும்பாலான ரயில்கள் டீசல் அல்லது மின்சாரத்தில் இயங்குகின்றன.


உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் எரிசக்தி நிறுவனங்களும் ஹைட்ரஜனை நம்பியே இருக்கிறது. இதன் எதிர்கால பயன்பாடுகள் மற்றும் செலவுகள் நிச்சயமற்றதாக இருந்தாலும், பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கும் முயற்சிகளில் இந்த ரயில் முக்கிய பங்கு வகிக்கும்.






கடந்த ஆகஸ்ட் மாதம்தான், ஹைட்ரஜன் ரயில்களை தயாரித்து இயக்கிய முதல் நாடு என்ற பெருமையை ஜெர்மனி பெற்றது. இந்த ரயில்கள் எந்த மாசுபாட்டையும் வெளிப்படுத்துவதில்லை. சிறிய சத்தத்தை மட்டுமே வெளியிடுகிறது. நீராவி மற்றும் ஆவியாக்கப்பட்ட நீரை வெளியிடுகின்றன.