இந்தியன் ரயில்வேயால் இயக்கப்படும் வந்தே பாரத் படுக்கை வசதிக் கொண்ட ரயிலில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க் ஆக ரயில்வே துறை செயல்படுகிறது. நகரங்கள் தொடங்கி கடைக்கோடி கிராமம் வரை ரயில் சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து ரயில் பாதை தடங்களும் மின்மயமாக்கப்பட்டு வருகிறது. அத்தகைய வழித்தடங்களில் புதிது புதிதாக ரயில்களை இயக்கி பயணிகளின் வசதியை இந்திய ரயில்வே துறை மேம்படுத்தி வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை மின்சார ரயில், பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, தேஜஸ், நமோ பாரத், வந்தே பாரத் (இருக்கை வசதி) கொண்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சேவைகள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்கள்
இப்படியான நிலையில் 2019-2024ம் ஆண்டு நடைபெற்ற மத்திய பாஜக அரசில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இவை இருக்கை வசதி கொண்டவையாக இருந்தது. இதில் அதிக கட்டணம் என்ற போதிலும், குறைவான நேரத்தில் பயணம், இரு வேளை உணவு, முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட பெட்டி என பல வசதிகளும் இருந்ததால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் தோற்றம் சமூக வலைத்தளங்களில் புகைப்படம், வீடியோவாக வெளியாகி வைரலானது. பயணிகள் தங்கள் பயணங்களை விரைவாகவும் அதிக வசதியுடனும் மேற்கொள்ள உதவும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கன்ஃபார்ம் டிக்கெட் மட்டும் தான்
இப்படியான நிலையில் இத்தகைய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட்டுகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 3 டயர் ஏசிஅடிப்படை கட்டணம் கிலோமீட்டருக்கு ரூ.2.4 எனவும், 2 டயர் ஏசி பெட்டியில் கிலோமீட்டருக்கு ரூ.3.1 மற்றும் முதல் வகுப்பு ஏசியில் கிலோமீட்டருக்கு ரூ.3.8 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹவுரா-குவஹாத்தி இடையே தான் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலானது இயக்கப்படுகிறது. ஜனவரி 17ம் தேதி முதல் இந்த சேவை தொடங்கப்படுகிறது. இந்த ரயிலில் முன்பதிவு செய்தால் கன்ஃபார்ம் டிக்கெட்டுகள் மட்டுமே கிடைக்கும். மற்ற ரயில்களில் இருப்பது போல RAC (ரத்துசெய்யப்படுவதற்கு எதிரான முன்பதிவு) அல்லது வெயிட்டிங் லிஸ்ட் என்பதெல்லாம் இருக்காது. அதேசமயம் இந்த வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் சேவையில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலில் 3 டயர் ஏசி கொண்ட 11 பெட்டிகள், 2 டயர் ஏசி கொண்ட நான்கு பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு ஏசி கொண்ட ஒரு பெட்டி இடம் பெற்றிருக்கும். மொத்தம் 823 படுக்கைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.