மும்பை மகாராஷ்டிராவுக்குச் சொந்தமானது இல்லை என்று பிரசாரத்தின் போது அண்ணாமலை கூறியது, அங்கு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலைக்கு அங்குள்ள பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதற்கு அண்ணாமலை சவால் விட்ட நிலையில், சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார். அவர், அண்ணாமலையை ஜீரோ என்றும் சொந்தத் தொகுதியில் டெபாசிட் கூட வாங்க முடியாதவர் என்றும் விமர்சித்துள்ளார்.
மும்பை பற்றி கருத்து தெரிவித்த அண்ணாமலை
மும்பையில், வரும் 15-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு தமிழர்கள் கணிசமாக வாழ்ந்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் தமிழர்களிடையே பிரசாரம் செய்ய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அங்கு சென்றார்.
பல்வேறு இடங்களில் தமிழர்களிடையே பேசிய அவர், ஒரு இடத்தில் பேசும்போது, மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் இல்லை, அது ஒரு சர்வதேச நகரம் என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, பல்வேறு தரப்பில் விவாதமாக மாறியுள்ளது. மகாராஷ்டிராவையும் மராட்டியர்களையும் அவமதிக்கும் வகையில் அண்ணாமலை பேசிவிட்டதாகக் கூறி, கண்டங்கள் எழுந்துள்ளன. அங்குள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாகச் சிவசேனா இதை பெரிய விஷயமாக மாற்றி கடுமையாக விமர்சித்து வருகிறது.
சிவசேனா மிரட்டலுக்கு அண்ணாமலை பதிலடி
உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், மும்பை மாநகருக்குள் அண்ணாமலை கால் வைத்தால் காலை வெட்டுவோம் என எழுதப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “நான் மும்பைக்கு வருவேன், வரத்தான் போகிறேன். முடிந்தால் என் காலை வெட்டுங்கள் பார்ப்போம்.“ என்று கூறினார்.
அண்ணாமலை மீது ஆதித்ய தாக்கரே கடும் விமர்சனம்
இந்நிலையில், அண்ணாமலையின் கருத்துகள் குறித்து தாக்கரே சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். பாஜகவில் அண்ணாமலை ஒரு ஜீரோ என்றும், சொந்த தொகுதியிலேயே டெபாசிட் வாங்க முடியாதவர் அண்ணாமலை எனவும், தேர்தலில் தோற்றுவிட்டு, நாட்டின் அடுத்த பிரதமரைப் போல பேசிக் கொண்டு இருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், அண்ணாமலை மும்பை குறித்து எங்களுக்கு அறிவுரை வழங்கத் தேவையில்லை என்றும், அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துவிட்டனர் என்றும் தனது கண்டனத்தை ஆதித்ய தாக்கரே பதிவு செய்தார். அதோடு, “மும்பை பற்றிப் பேச அவர் யார்.? அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர். இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்றும் கடுமையாக விமர்சித்தார்.
அண்ணாமலை கருத்துக்கு பாஜக விளக்கம்
அண்ணாமலையின் இந்தக் கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அங்குள்ள பாஜக தலைவர்கள் இது குறித்து விளக்கமளித்துள்ளனர். மும்பையை பெருமைப்படுத்துவதற்காகவே அண்ணாமலை இந்த கருத்தைச் சொன்னதாகவும், மும்பையை அவமதிக்கும் நோக்கம் அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ இல்லை என்று அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.