புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கத்தை நியமித்து, அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.


காங்கிரஸில் மாற்றம்:


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும், அமைப்பு ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு துடிப்பான நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்குவதோடு, தொகுதி ரீதியான களப்பணியையும் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் காங்கிரஸும் நீண்ட காலமாக காலியாக இருந்த புதுச்சேரி தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு புதிய நபர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  


புதுச்சேரியில் படுதோல்வி:


2021ம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. 2016ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களை கைப்பற்றியது. ஆனால், 2021ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 


காலியாக இருந்த பதவி:


இதனால், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஏ.வி. சுப்பிரமணியன் கட்சித் தலைமையிடம் தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர்களாக இருந்த கந்தசாமி, ஷாஜகான், கொறடாவாக இருந்த அனந்தராமன், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மாநிலத் தலைமை பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.  ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து இரு ஆண்டுகளாகியும் மாநிலத் தலைவர் மாற்றத்தை காங்கிரஸ் செய்யவில்லை.


வைத்திலிங்கம் நியமனம்:


இந்நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள சூழலில் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருந்த புதுச்சேரி தலைவர் பதவிக்கு வைத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.  தற்போது புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வைத்திலிங்கம் காங்கிரஸ் கட்சியுடன் 50 ஆண்டு பந்தம் கொண்டுள்ளார். இவர் 8 முறை சட்டமன்ற உறுப்பினராக வென்று பொதுப்பணித்துறை, தொழில்துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். அதோடு புதுச்சேரி முதலமைச்சராக 2 முறை பதவி வகித்துள்ளார். 1991 முதல் 1996 வரையும், 2008 முதல் 2011 வரை என 2 முறை வைத்திலிங்கம் முதலமைச்சராக செயல்பட்ட நிலையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக  உள்ளார்.


புதிய தலைவர்கள்:


இதனிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக சக்திசிங் கோகிலும், மும்பை காங்கிரஸ் தலைவராக வர்ஷா கெய்க்வாட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா பொறுப்பாளராக பிசி விஷ்ணு ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டெல்லி மற்றும் அரியானா பொறுப்பாளராக தீபக் பாபாரியாவும், காங்கிரஸ் கட்சியின் செயலாளராக மன்சுர் அலிகானும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு, உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு, விரைவில் தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.